Tuesday, May 11, 2010

உலக கோப்பை அரை இறுதியில் நுழைய இந்தியாவுக்கு திடீர் வாய்ப்பு!


உலக கோப்பை டி20ல் அரை இறுதிக்கு கூட தகுதிபெற முடியாமல் பரிதாபமாக வெளியேற வேண்டிய இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள இந்திய அணி, தனது கடைசி சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதுகிறது. சூப்பர் 8 லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் எதிர்ப்பே இல்லாமல் மண்டியிட்ட இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடன் நடந்த 2வது ஆட்டத்தில் கிறிஸ் கேல் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த தோல்விகளுக்கு கேப்டன் டோனியின் சில தவறான முடிவுகளே முக்கிய காரணமாக அமைந்துவிட்டன.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பார்படாஸ் ஆடுகளத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது முதல் தவறு. டாசில் வென்று முதலில் பேட் செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்தது 2வது தவறு. மந்திரிக்கப்பட்ட ஆடு மாதிரி களத்தில் ‘பே’ என்று பேந்தப் பேந்த விழிக்கும் ஜடேஜாவுக்கு ஓவர் மேல் ஓவர் கொடுத்தது 3வது தவறு. இந்த மூன்று தவறுகளையும், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஆட்டத்தில் அப்படியே ‘ஆக்ஷன் ரீப்ளே’ செய்தது இமாலயத் தவறு. விளைவு... அரை இறுதி வாய்ப்பு கானல் நீராக போக்கு காட்டுகிறது.

பவுன்சர் போட்டால் போதும், இந்திய பேட்ஸ்மேன்களை பெட்டிப் பாம்பாக அடக்கிவிடலாம் என்று எதிரணி கேப்டன்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நன்றாக எகிறி வரும் பந்தை எப்படி ஆடுவது என்று ஒருத்தருக்கும் தெரியவில்லை. பேயடித்தது போல மிரண்டுபோய் கண்ணை மூடிக் கொண்டு மட்டையை நீட்டுகிறார்கள்.

எல்லாம் முடிந்தது என்ற நிலையில், கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்று இந்திய அணி கணக்கு போடுகிறது. அதற்கு நூலிழை வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த குழப்பத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுவதில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்துவது அவசியம். காசுக்காக விளையாடும் ஐபிஎல் போட்டியில் மட்டும் தூள் கிளப்பினால் போதாது. நாட்டுக்காக விளையாடும் போதும் அதே உத்வேகத்தை காண்பிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டோனி அண்ட் கோ கண் விழிக்குமா?

இதெல்லாம் நடந்தால்... அரை இறுதியில் இந்தியா

1.இன்று நடக்கும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு
இடையேயான போட்டியில்

இலங்கை முதலில் பேட்டிங் செய்தால்

இலங்கை எடுத்திருக்கும் ரன்னை இந்திய அணி 17 ஓவருக்குள் எடுத்து வெற்றி பெற வேண்டும்!

(அல்லது)

இந்தியா முதலில் பேட்டிங் செய்தால்

இலங்கையை 20 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்!


2.அதே போல்

ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்திய தீவை (சாதாரணமாக) வெல்ல வேண்டும்!

இவை அனைத்தும் நடந்தால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

No comments:

Post a Comment