Friday, May 7, 2010

'அருண் விஜய்யால் ரூ.1.5 கோடி நஷ்டம்'!-மாஞ்சா வேலு படத்துக்கு தடை


shockan.blogspot.com
நடிகர் அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு படத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் .

வரும் மே 21ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்துக்கு 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாக்டரும், சினிமா தயாரிப்பாளருமான பி.காளிதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

கடந்த 15 ஆண்டுகளாக சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நடிகர் அருண் விஜய்யை வைத்து துணிச்சல் என்ற படம் எடுத்தேன். 2008ல் படம் எடுத்து முடித்தோம். சென்சார் போர்டு அனுமதி அளித்துவிட்டது. ஆனால், இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி கொடுக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அருண் விஜய் இழுத்தடித்தார். பல தடவை கோரிக்கை விடுத்தும் அவர் மறுத்துவந்தார்.

படத்தின் தொடக்க காட்சி பாடல் வேண்டும், கதாநாயகியை மாற்ற வேண்டும், இரண்டாவது ஹீரோவின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களை கூறி டப்பிங் பேசி கொடுக்காமல் இருந்தார். 45 நாட்கள் சூட்டிங் சம்பளம் மற்றும் டப்பிங்கிற்காக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளோம். முழு பணத்தை கொடுத்து முடித்த பிறகும் நடிகர் அருண் விஜய் டப்பிங் பேசி கொடுக்கவில்லை.

இழுத்தடிப்பு...

இதுவரை ரூ.2 கோடி செலவு செய்து படத்தை எடுத்து முடித்துவிட்டோம். இனிமேல் திரும்பவும் படத்தை எடுக்க முடியாது என்று கூறினோம். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டோம். அதற்குள் அவர் டப்பிங் பேசி கொடுக்கவில்லை. இதற்கிடையே நடிகர் அருண் விஜய் நடித்த மலை மலை படத்தை ரிலீஸ் செய்த பிறகு எனது துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கும் நான் ஒப்புக் கொண்டேன்.

துணிச்சல் படத்திற்கு நடிகர் அருண் விஜய் டப்பிங் பேசி கொடுக்க காலதாமதம் செய்ததால் 160 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு பதிலாக வெறுமனே 16 தியேட்டர்களில்தான் கடந்த ஜனவரி 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. இதனால் எனக்கு ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்தை எடுத்த 4 ஆண்டுகளில் என்னை நடிகர் அருண் விஜய் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அதனால் எனது டாக்டர் தொழிலையும் செய்ய முடியாமல் போனது.

எனவே, எனக்கு நடிகர் அருண் விஜய் ரூ.1.5 கோடி கொடுக்க வேண்டும். அதுவரை அவர் நடித்து 21ம் தேதி வெளிவர உள்ள 'மாஞ்சா வேலு' படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்..." என்று கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் இந்த மனுவை விசாரித்து, 'மாஞ்சா வேலு' படத்துக்கு வரும் மே 19ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment