Thursday, May 13, 2010

'அண்ணா மறைவுக்குப் பின் என்னை முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்'- கருணாநிதி


shockan.blogspot.com
அண்ணாவின் மறைவுக்குப் பின், என் குடும்பத்தாரி்ன் எதிர்ப்புகளை எல்லாம் மீறி, முதல்வர் பதவியில் என்னை உட்கார வைத்தவர் எம்.ஜி.ஆர் தான் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதி முதல்வர் பதவிக்கு வந்து 18 ஆண்டுகள் முடிந்து 19வது தொடங்குவதையொட்டியும், திமுக அரசு பதவியேற்று நான்காண்டுகள் முடிந்து இன்று 5வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டியும் சட்டசபையில், முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருணாநிதி பேசியதாவது:

வடநாட்டில், டெல்லி பட்டணத்தில் சோனியா காந்தியும், அத்வானியும் ஒரு திருமண விழாவிலே இருவரும் கலந்து கொண்டு, அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டு, அன்போடு பழகுவதைக் காணுகிறோம்.

காணும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை விட- என்னைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமானால்- பொறாமைதான் ஏற்படுகிறது. அத்வானியோடு சோனியா காந்தி பேசுகிறாரே என்று பொறாமை அல்ல; இந்த நிலை தமிழ்நாட்டிலே இல்லையே என்ற காரணத்தால் எழுகின்ற பொறாமை.

ஒரு காலத்திலே இதைவிட வேகமாக மோதிக்கொண்ட கட்சிகள் என்று சொன்னால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் காமராஜரை நான் சாடாத கூட்டங்கள் இல்லை. எழுதாத கட்டுரைகள் இல்லை. ஆனால், அவர் பெருந்தலைவர் என்பதற்கேற்ப, எப்படி நடந்து கொண்டார் என்பதை அவருடைய வரலாறு விளக்கும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே அதைக் காணலாம்.

அண்ணாவால் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தப்பட்டபோது, அந்த மாநாட்டினுடைய முதல் விழாவைத் தொடங்கி வைக்க வந்தவரே பெருந்தலைவர் காமராஜர்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆனால், அடுத்து தமிழகத்தில் நடந்த தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அது என் குற்றமா? அல்லது மாநாடு நடத்தியவர்களின் குற்றமா என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் சென்று, அதை நான் விவாதப் பொருளாக ஆக்க விரும்பவில்லை.

என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்தபோது, அவருக்கும், எனக்கும் எத்தனையோ பூசல்கள், எத்தனையோ கடுமையான வாக்குவாதங்கள் இந்த அவையிலேயே நடந்ததுண்டு. நான் சாட்டிய குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் இவற்றுக்கெல்லாம் அவர் வேகமாக அளித்த பதில்கள் எல்லாம் இன்றைக்கும் எனக்கு நினைவிலே இருக்கின்றன.

அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.

என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மொழிப் பிரச்சனையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சனையில் நானும் கருணாநிதியும், நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். அவையிலே சொன்னது இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கிறது.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.

திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.

என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ''ஐயா'' என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

அப்படிப்பட்ட அரசியல் பண்பாட்டையும், தமிழ் பண்பாட்டையும் காப்பாற்றும் வகையில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அதற்கு என்றும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments:

Post a Comment