Thursday, May 13, 2010

சோடை போன கோடை!


shockan.blogspot.com
தமிழ் சினிமா சீஸன்களில் மிக மிக முக்கியமான காலகட்டம் கிட்டத்தட் 50 நாட்கள் நீளும் கோடை விடுமுறை.

ஏப்ரல் முதல் வாரம் துவங்கும் இந்த சீஸன் மே இறுதி வரை நீள்கிறது. இந்த நாட்களில் சற்று சுமாரான படம் போட்டால் கூட ஓஹோவென்று ஓடியது, ஒரு காலம்.

மாற்று பொழுதுபோக்குகள் பெருகிய இன்றைய சூழலிலும் கூட, சம்மர் ஸ்பெஷலாக வரும் படங்களுக்கென்று கணிசமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் படங்களின் தரம் அதலபாதாளத்துக்குப் போய் விட்டதால், தியேட்டர் பக்கமே தலைவைத்துப் படுக்க மறுக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தக் கோடையைக் குறிவைத்து 25 படங்கள் தயாராகின. பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் வசூல் ரீதியாக ஒரு படம் கூட சொல்லிக் கொள்கிற ரகமில்லை. பையா படம் மட்டும், அதன் இனிய இசை மற்றும் பாடல்களுக்காக நகர்ப்புறங்களில் சற்றுத் தாக்குப்பிடித்து ஓடுகிறது.

மற்ற படங்களில் எதுவும் அதன் தயாரிப்புச் செலவில் பாதியைக் கூடத் தாண்டவில்லை என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு.

விஜய்யின் 50வது படம் என்ற சிறப்போடு வெளிவந்தது சுறா. வெளியான மூன்றாவது நாள், இந்தப் படம் சிறப்பாக ஓடுவதாக விஜய் பேட்டி கொடுத்திருந்தார். அடுத்த மூன்றே நாள்களில் 50 திரையரங்குகளில் இந்தப் படம் தூக்கப்பட்டதாக வினியோகஸ்தர்கள் சங்கப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நான்காவது நாள் காசி திரையரங்கில் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூப்பிடுகிறார்கள் படம் பார்க்க. அந்த அளவு வெறிச்சோடிக்கிடந்தது திரையரங்கம்!.

குறைந்தபட்சம் விஜய்யின் ரசிகர்களால் கூட தியேட்டருக்குள் பொறுமையாக உட்கார முடியாத அளவுக்கு படத்தின் தரம் அமைந்தது.

கடந்த வாரம் மட்டும் நான்கு படங்கள் வெளியாகின. இதில் குருசிஷ்யன் என்ற படத்தைப் பார்த்துவிட்டு தலையிலடித்துக் கொண்ட, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், தமிழ் சினிமா வுக்கு விடிவே கிடையாதா என்றார் சோகத்துடன்.

ஒரு திரைப்பட விழாவிலும் இதனைக் குறிப்பிட்டு, "இயக்குனர்கள் தரமான படங்களை, மக்கள் ரசிக்கும் விதத்தில் தர வேண்டும். நாங்களெல்லாம் கொஞ்ச நாளைக்காவது இந்தத் துறையில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்..." என்றார்.

கோரிப்பாளையம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய இரு படங்களும் கூட முதல்வாரமே தாக்குப் பிடிக்க முடியாமல் தத்தளிக்கின்றன. ராம நாராயணனின் குட்டிப் பிசாசு முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியதாகவும், அதற்கடுத்து நாள்களில், அந்தப் படத்தின் வசூலும் கவலைக்கிடமாகிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார் சேகரன்.

இனி வரும் வாரங்களில் பெண் சிங்கம், சிங்கம், மதராஸ் பட்டிணம், மாஞ்சா வேலு, மகனே என் மருமகனே, அம்பாசமுத்திரம் அம்பானி, மா, கனகவேல் காக்க, கற்றது களவு, ஐவர், 365 காதல் கடிதங்கள் ரிலீஸாக உள்ளன. இவை அனைத்துமே ஜூன் முதல் வாரத்துக்குள் ரிலீஸாகவிருக்கும் படங்களின் பட்டியல்.

"நம்பிக்கைதான் சினிமா தொழிலின் முக்கிய முதலீடு. ஆனால் இன்று அந்த நம்பிக்கையையே சிதைக்கும் வகையில்தான் படங்கள் வருகின்றன. திரும்பத் திரும்ப இயக்குனர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், திட்டமிடுங்கள். சரியான விஷயத்தை வக்கிரமில்லாமல் சொல்லுங்கள். குடும்பத்தினருக்கு, இளைஞர்களுக்கு சரி்யான இலக்கோடு நேரம் பார்த்து ரிலீஸ் பண்ணுங்கள்... நிச்சயம் சுமாரான படங்கள் கூட ஓரளவு தப்பித்துக் கொள்ளும். சினிமாவை தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறும் இன்றைய இளைஞர்கள், தொழில்முறைக் கலைஞர்களாக இல்லாமல் இருப்பதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை" என்கிறார் கலைப்புலி சேகரன்.

யோசிக்க வைக்கும் கருத்துதான்!

No comments:

Post a Comment