Monday, May 10, 2010

பழிவாங்கும் கார் மனிதன்


shockan.blogspot.com
ராம்ஜி, சங்கீதா தங்களது ஒரே குழந்தை கீத்தீகாவை பாசத்துடன் வளர்க்கின்றனர். இந்த நிலையில் தொழில் அதிபர் ரியாஸ் கானை சந்திக்க வரும் மேஜிக் நண்பர், தனது மந்திர சக்திகளை காட்டி ஆச்சரியப் பட வைப்பதுடன், ‘கன்னிப் பெண்ணை பலி கொடுத்தால் வங்கியில் உள்ள பணத்தையெல்லாம் அடையும் சக்தி பெற முடியும்’ என்கிறார். அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறும் ரியாஸ், தனது முறைப்பெண் காவேரியை அழைத்து வருகிறார். காவேரியை வசியப்படுத்தி தீயில் எரிக்கிறார் மேஜிக் நண்பர். அப்போது வரும் கஞ்சா கருப்பு தனது தங்கை தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தானும் தீயில் குதித்து உயிர் விடுகிறார். இறந்துபோன கஞ்சா கருப்புவின் ஆவி ஒரு காரிலும், காவேரியின் ஆவி, குழந்தை கீத்திகா உடலிலும் புகுந்துகொண்டு ரியாஸ் கானையும் அவரது நண்பர்களையும் எப்படி பழிவாங்குகிறது என்பது கதை.

பேபி கீத்திகாவின் நடனம், குட்டி மஞ்சள் காரின் சாகசம்தான் படத்தின் ஹைலைட். இதையே கருவாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறார்கள். கார் மற்றும் கீத்திகாவின் ஆட்டம், பாட்டம் சுவாரஸ்யம். அந்த காலத்து மஞ்சள் நிற கார், திடீரென்று ராட்சத மனிதனாக மாறி ரியாஸ்கான், நண்பர்களை துரத்துவதும், அங்கிருக்கும் கார்களை தூக்கி வீசுவதும் பரபரக்க வைக்கிறது.

நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறக்கும் சங்கீதா, அங்கு தனது குழந்தை கீத்திகா நிற்பதை கண்டு திடுக்கிடுவதும், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ‘தண்ணி கொடு, தலையை முழுகணும்’ என்ற கோபமாக கீத்திகா கேட்பதும் திடுக். ‘எதுக்கு நீ தலை முழுகணும்’ என்று சங்கீதா கேட்க,‘ இழவுக்கு போயிட்டு வந்தா குளிக்கணும்ன்னு நீதானே சொன்னே’ என்றபடி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு கீத்திகா வீட்டுக்குள் நடக்கும்போது ரசிகர்களும் அதிர்ச்சி அடைகின்றனர்.

குடுகுடுப்பைக்காரராக வரும் தண்டபாணி வந்ததும் காட்சிகள் வேகமாக நகர்கிறது. முனியாண்டி விலாஸ் ஓட்டலுக்குள் நுழையும் கீத்திகா மட்டன், சிக்கன், பிரியாணி என பிளேட் பிளேட்டாக ஆர்டர் செய்து வெளுத்துகட்டுவதைப் பார்த்து உறைந்துபோவதும், பள்ளிக்கூட புத்தக பையிலிருந்து ரத்த பாட்டிலை எடுத்து கீத்திகா மடக் மடக் என்று குடிப்பதை பார்த்து திகிலடைவதுமாக டெல்லி கணேஷும், ராம்ஜியும் குபீர் சிரிப்பு பொங்கச் செய்கின்றனர்.

நெற்றி நிறைய குங்குமப்பொட்டுடன் காவல் தெய்வமாக வரும் ரம்யா, கண்களை அகலவிரித்து பயமுறுத்துகிறார். தண்ணீர் கேனை பிடுங்கி குடிப்பது, ஆளை போட்டுத்தள்ளியதும் டிக்கியை காட்டி ஆட்டம்போடுவது என குட்டிக் காரின் அட்டகாசம் காட்சிகளுக்கு சுவை கூட்டுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் லிவிங்ஸ்டன் தன் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார். கிராபிக்ஸ் காட்சிகளை கலக்கலாக இணைத்திருக்கிறார் இயக்குனர். தேவா இசையில் பாடல்கள் குட்டீஸ்களை குத்தாட்டம் போட வைக்கிறது. கே.எஸ்.செல்வராஜ் கேமரா பளிச்சிடுகிறது. ஏற்கனவே சேனல்களில் பார்த்த காட்சிகள், லாஜிக் இல்லாத கிராபிக்ஸ் என படத்தை கொண்டுபோயிருக்கும் இயக்குனர், இன்னும் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம்.

No comments:

Post a Comment