Saturday, May 8, 2010

அம்பானியின் காலாவதியான விஷ உணவு!


shockan.blogspot.com
தமிழகத்தில் காலாவதி மருந்துகளைப் போலவே காலாவதி உணவுப் பொருட்களும் தாராளமாய் புழங்குவதை அதிகாரிகள் கண்டுபிடிக்க இதன் அதிர்ச்சி அலை... சட்டமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது.

இதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள நாம் களத்தில் குதித்தோம். காலாவதியான பொருட்கள் பெரும்பாலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ப்ரஷ் என்கிற உயர் வகுப்பு மக்கள் வாங்கக்கூடிய பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இருந்துதான், உழைக்கும் மக்கள் வாழக்கூடிய வடசென்னை பகுதிக்குச் செல்கிறது என்கிற தகவல் வர... ரிலையன்ஸ் கடைகளை குறிவைத்தோம்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் இயங்கும் ரிலையன்ஸ் கடைகளிலும், அசோக் நகர் பகுதியில் இருக்கும் கடைகளிலும் நாம் போனபோது காலாவதியான பொருட்களை அவசரமாக பிரித்துக்கொண்டிருந்தார்கள். பிரிக்கப்படாத சில காலாவதிப் பொருட்கள் கடையின் விற்பனைப் பகுதியில் இருந்தது.

ஏன் இப்படி என அங்கிருந்த விற்பனையாளர்களிடம் கேட்டோம்.

""ஒவ்வொரு பொருளும் காலாவதி தேதியை நெருங்கும்போது, அவற்றை தனியாகப் பிரித்து பாதி விலைக்கு விற்றுவிடுவோம். இந்த காலாவதியான பொருட்களை திரட்டி ஒரு வண்டியில் போட்டு புழலில் இருக்கக்கூடிய மொத்த விற்பனை மையத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.

இந்த காலாவதி பொருட்களின் விற்பனை நெட்வொர்க் செயல்படும் புழலுக்கு விரைந்தோம். சென்னை-விஜயவாடா நெடுஞ்சாலையில், புழலிலிருந்து சில மீட்டர் தூரத்தில் மிக பிரமாண்டமாக அமைந்திருந்தது ரிலை யன்ஸ் மையக்கிடங்கு. அந்த கிடங்கில், காலாவதியான பொருட்களை பிரிப்பதற்கென் றே ஒரு பெரிய பிரிவு இயங் கிக்கொண்டிருந் தது.

அங்கிருந்து வெளியே வந்து அந்தக் கிடங்கின் அருகே உள்ள வெற்றிலைப் பாக்கு கடைக்குச் சென்றோம். தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர்தான் அந்தக் கடையின் உரிமையாளர். கடை முழுவதும் பெப்சி, கோக் போன்ற பொருட்கள் டின் வடிவத்தில் வைக்கப்பட்டிருந்தது.

""எல்லாம் ரிலையன்ஸ் கிடங்கில் இருந்து பாதி விலைக்கு வாங்கியது தான்'' என ஒத்துக்கொண்ட செல்வத்திடம் "இந்தப் பொருட்கள் எல்லாம் காலாவதியானவையா?' என கேட்டோம்.

""அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள். காலாவதியான பொருட்களையெல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அவர்களிடமிருந்து நாங்கள் வாங்குவோம்... ரிலையன்ஸ்காரங்க எந்தப் பொருளையும் வீணாக்கமாட்டார்கள். கடைகளிலிருந்து வரும் விற்பனையாகாத காய்கறிகளைக்கூட இங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள சண்முகபுரத்தில் ஒரு கடையை எடுத்து அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள்'' என்றார்.

அதிர்ச்சியடைந்த நாம் "அந்தக் கடையின் முகவரியைத் தரமுடியுமா?' என்றோம்.

""அந்த ஏரியாவுக்குப் போய் ரிலையன்ஸ் கடை எதுவென்று கேளுங்கள். எல்லோரும் அடை யாளம் காட்டுவார்கள்'' என்றார்.

அவர் சொன்னது மாதிரியே ரிலையன்ஸ் கடை எதுவென்று கேட்டபோது... ஒரு கடையைச் சொன்னார்கள். ""காலாவதியான உணவுப்பொருட்கள் பிரச் சினை வெளியே வந்ததிலிருந்து அந்தக் கடை இயங்க வில்லை. அதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயர் போட்ட பைகளில் காய்கறி முதல் மைதாமாவு, அரிசி, பழங்கள் என அனைத்தும் இங்கு விற்கப்பட்டது. அதற்கு ரிலையன்ஸ் கம்பெனி பெயரில் உள்ள பில்லும் தருவார்கள்'' என விபரம் சொன்னார் அந்தக் கடை அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரான சாந்தி.

அந்தக் கடையின் உரிமையாளர் பெயர் அமுதா. அவர் ரிலையன்ஸ் கிடங்கில் வேலை பார்த்தவராம். அவரது கணவர் சோமசுந்தரத்திடம் தொலைபேசியில் பேசவைத்தார் வீட்டு உரிமையாளர் சாந்தி. ""காலாவதியான பொருட்களைத்தான் விற்கிறோம்'' என்று அவர் ஒத்துக்கொண்டார்.

வண்ணாரப்பேட்டையில் காலாவதியான ரிலையன்ஸ் பொருட்களை விற்கிறார்கள் என ஒரு கடையை ரெய்டு செய்து, அந்த வழக்கை விசாரிக்கும் ராயபுரம் உதவி கமிஷனர் நவின்சந்த்தை சந்தித்துப் பேசினோம்.

""இந்தக் கடையை துரைப்பாண்டி என்கிற அ.தி.மு.க. பிரமுகர்தான் நடத்திவந்தார். தலைமறைவாக உள்ள அவரது கடையை சோதனை செய்தபோது ரிலையன்ஸ் குடோனில் இருந்துதான் காலாவதி உணவுப் பொருட்களை வாங்கி விற்றது தெரிய வந்தது'' என ஆதாரத்துடன் அடித்துக் கூறினார்.

தமிழகத்தில் ரிலையன்ஸ் கம்பெனியின் கடைகளை நிர்வகித்துவரும் சென்னை நகர கூடுதல் கமிஷனராக இருந்து ஓய்வுபெற்ற பாலசந்திரனை சந்தித்து...

"காலாவதியான உணவுப் பொருட்களை விற்பது சட்ட விரோதமில்லையா?' என கேட்டோம்.

""காலாவதியான எந்தப் பொருளையும் எங்கள் கடைகளில் விற்பதில்லை. காய்கள், இறைச்சி போன்ற பொருட்களை சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைத்துவிடுகிறோம். மற்ற தின்பண்டங்களை அழிக்க எங்களிடம் வசதியில்லை. அதனால் அவற்றை அடிமாட்டு விலைக்கு விற்கிறோம். இந்தப் பொருட்கள் மனிதன் தின்பதற்கு உகந்தவை அல்ல என சான்றிதழ் ஒன்றை அவர்களிடம் கொடுப்போம். வண்ணாரப்பேட்டை துரைப்பாண்டி அப்படிப்பட்ட சான்றிதழ் போடப் பட்ட பொருட்களை என்னிடம் இருந்து வாங்கி சட்ட விரோத மாக விற்றிருக்கிறார்'' என ஒத்துக்கொண் டார்.

அவரிடம் நாம் "சண்முகபுரத்தில் துரைப்பாண்டி பாணியில் ரிலையன்ஸின் காலாவதி யான மைதா, அரிசி போன்றவற்றையும் அமுதா என்பவர் விற்கிறாரே?' என கேட்டதற்கு... ""அப்படி விற்பது தவறு. அரிசி, மைதா போன்ற காலாவதியான பொருட்களை கோழித்தீவனம் தயாரிப்பதற்காக நாங்கள் விற்கிறோம்'' என்றார்.

அடுத்து காலாவதியான பொருட்கள் எந்தெந்த வடிவத்தில் புழங்குகிறது என்பதை அறிய வணிக நிர்வாகிகளில் ஒருவரான விக்டோரியா தாமஸை சந்தித்தோம்.

""காலாவதியான பொருட்களை ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து வாங்கி விற்க ஒரு பெரிய மாஃபியா கும்பலே வண்ணாரப்பேட்டையிலும் பாரிமுனையிலும் கொழுத்த பணத்துடன் செயல்படுகிறது. உணவுப்பொருட்களை தயாரிக்கும் ஐ.டி.சி., பாரி போன்ற கம்பெனிகள் காலாவதியான பொருட்களையும் விற்பனை ஆகாத பொருட்களையும் திருப்பி வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை சுத்தமாக கைவிட்டுவிட்டார்கள். ரிட்டர்ன் பெறமாட்டோம் என சொல்லியே மொத்த வியாபாரிகளிடம் விலையைக் குறைத்து இத்தகைய பெரிய கம்பெனிகள் விற்பதினால், காலாவதியான பிறகும் விற்பனையாகாத பொருட்களை என்ன செய்வது என தெரியாமல் விற்பனையாளர்கள் முழி பிதுங்குகிறார்கள். ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மறுபடியும் மார்க்கெட்டுக்கே காலாவதியான பொருட் களை விற்கிறது'' என் றார்.

இதுபோன்ற காலாவதியான பொருட்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்க வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி குகானந்தத்தைச் சார்ந்தது. அவர் நம்மிடம்...

""சென்னை நகரில் மொத்தம் 600 தினசரி மார்க்கெட்டுகள் இருக்கிறது. அவற்றில் கலப்பட பொருள், காலாவதி பொருள் என எது விற்பனைக்கு வந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து, அதை அழிப்பது அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளரின் கடமை. சென்னை மாநக ராட்சியின் சுகாதாரத்துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையையும் தாண்டி நாங்கள் இவற்றையெல்லாம் தடுத்து அழிக்க முயல்கிறோம், முடியவில்லை'' என்கிறார்.

காலாவதியான உணவுப்பொருள் விஷத்தன்மை அடைந்துவிடும். அதை உண்பது தற்கொலை செய்துகொள் வதற்குச் சமம். இதில் பெரும்பாலும் சிக்கி பலியாவது, ஏறிக்கொண்டேயிருக்கும் விலை வாசியால் மலிவான விலையில் ஏதாவது வயிற்றை நிறைக்கக் கிடைக்குமா? என தேடி அலையும் ஏழைகள் தான்.

காலாவதிப் பொருட்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment