Monday, May 17, 2010

ஜோதிடத்தை நம்புவது யார்? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி


shockan.blogspot.com
'இளம் வயது முதலே ஜோதிடத்தில் நான் நம்பிக்கை வைத்ததில்லை' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.



அவரது அறிக்கை:நம் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது கட்சிக்காரர்கள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்துவிட்டு பேசும் போது, மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தை விட, என்னை வசை பாடுவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது, மண விழாவானாலும், ஆர்ப்பாட்டமானாலும், எந்த விழாவானாலும், அவரது பேச்சுக்கு மையமாக நான் மட்டும் தான் இருக்கிறேன் போல. எத்தனையோ பேர் எனக்கு சாபம் கொடுத்து முடித்து விட்டனர். ஏன், இந்த அம்மையாரே பல முறை எனக்கு கொடுத்த சாபம் எதுவும் பலிக்கவில்லை.நான் ஏதோ ஜோதிடன் பேச்சைக் கேட்டு, என் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப் போவதாக அறிவித்தேனாம். யாரோ ஜோதிடர், 'அந்த வீட்டிலே நான் தங்கியிருந்தால் என் உயிருக்கு ஆபத்து' என்று சொன்னதால் தான், வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேனாம்.



எந்த ஜோதிடன் சொன்னான் என ஜெயலலிதா நிரூபிக்கத் தயாரா? இன்னும் சொல்கிறேன்: என் பிறந்த நாளுக்குப் பிறகு, நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் ஜெயலலிதா, எந்த ஜோதிடன் சொன்னதையோ கேட்டுக் கொண்டு மண விழாவிலே புலம்பியிருக்கிறார்.



அது மட்டுமல்ல, 'மார்ச் மாதத்துக்கு மேல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே உட்கார்ந்திருந்தால், நீங்கள் திரும்ப ஆட்சிக்கு வரவே முடியாது' என ஜோதிடன் சொன்னதை கேட்டுவிட்டுத் தான் தலைமைச் செயலகத்தையும் மாற்றியிருக்கிறேனாம்.மார்ச் முடிந்து, ஏப்ரல் முடிந்து, மே நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் முற்று பெற இன்னும் மூன்று, நான்கு மாதங்களாகப் போகிறது; அதுவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது, ஜெயலலிதாவின் புளுகு என்னவாகப் போகிறது?ஏன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி, ஜோதிடர்களை அழைத்து வந்து, பூஜை, புனருத்தாரணங்கள் செய்து அடிக்கல் நாட்டினாரே; என்னவாயிற்று? அந்த ஜோதிடம் பலித்ததா?



'கடற்கரைச் சாலையில் இருந்த கண்ணகி சிலையை அன்றாடம் பார்த்துக் கொண்டே தலைமைச் செயலகம் சென்றால், ஆட்சி நீடிக்காது' என யாரோ ஜோதிடன் சொன்னதைக் கேட்டு, இரவோடு இரவாக லாரியை விட்டு இடிக்கச் சொல்லி, அந்தச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அருங்காட்சியகத்தில் ஒரு மூலையில் போட்டு வைத்தார்களே?



அந்த ஜோதிடன் சொன்னது பலித்து, அவருடைய ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்து, அன்றாடம் நான் பார்த்துக் கொண்டு தானே தலைமைச் செயலகம் செல்கிறேன்; என் ஆட்சிக்குத் தான் இடைஞ்சல் வந்துவிட்டதா?



ஏன், இன்று வந்துள்ள செய்தித்தாள்களில், ராகு - கேது பூஜை செய்ய ஜெயலலிதா, காளகஸ்தி போவதாக செய்தி வந்திருக்கிறது. இந்த ஜோதிடம், யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் அவருக்கே கைவைந்த கலையே தவிர, இளம் பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி, மண விழா மேடையிலே ஏறி வசை பாடியிருக்கிறார் என்றால், 'சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்தச் சீற்றம் ஏனோ' என்று தானே கேட்கத் தோன்றுகிறது. சிறுதாவூர் பற்றி புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம், என் மீது வரலாமா?இவ்வாறு கருணாநிதி கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment