Friday, May 21, 2010

உடல் முழுவதும் ராணுவ மூளை!


shockan.blogspot.com

முன்பு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிய ஒருவர் எனக்கு மிக்க நண்பர். அவரிடம் ஒருமுறை சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினாராம்: ""இந்த நாட்டின் ராணுவத்திற்கு தலைமைத் தளபதியாக இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் ஒரே ஒரு மனிதருக்குத்தான் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் தமிழராகப் பிறந்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் மட்டும் சிங்களராகப் பிறந்திருந்தால் இந்த நாடே வியக்கும் மகத்தான தளபதியாக கொண்டாடப்பட்டிருப்பார்.

அதுபோலத்தான் ஆனையிறவில் சந்தித்த படுதோல்வியை வெகு வேகமாகச் சரிசெய்ய வேண்டும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் பெரியதொரு ராணுவ வெற்றியைக் காட்டவேண்டுமென்ற வெறியோடு அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்கே- ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே கூட்டணி மிகப்பெரும் திருப்பித் தாக்குதலை, ஆனையிறவை மீளக்கைப்பற்றும் நோக்குடன் ""அக்னிஹேலா-தீப்பந்தம்'' எனப் பெயரிட்டு அமைத்தனர்.

பல்லாயிரம் ராணுவத்தினர், வான்படை, நூற்றுக்கணக்கான டாங்குகள், பல்குழல் எறிகணை வண்டிகள் என முன் நகர்ந்த ராணுவத்தை அரைமணி நேரத்தில் முறியடித்து சிதறியோட வைத்த பிரபாகரனது போர்க்களத் திட்டமிடலை வியந்து சிங்களத் தளபதி ஒருவர் பெயர் குறிப்பிடாமல் ஆஎட அனைத்துலகச் செய்தியாளரிடம் இவ்வாறு கூறியிருந்தார்: ""பிரபாகரனின் உடம்பு முழுவதுமே ராணுவ மூளையாக இருக்கும் போலிருக்கிறது.''

"அக்னிஹேலா-தீப்பந்த' ராணுவ அணிகளை முதலில் "ஜாலி'யாக முன்நகர்ந்து வர அனுமதித்த பிரபாகரன், கணிசமான தூரம் அவர்கள் முன்நகர்ந்தபின் பின்புறமாய் இருந்து இடைமறித்து தாக்குதல் தொடங்கினார். என்ன நடக்கிறதென்பது தெரியாமல் திகைத்த ராணுவத்தினர் வலதுபுறமாய் திரும்பிப் பயணிக்க அங்கும் தன் அணிகளை -இப்படித்தான் ராணுவம் வரும் என துல்லியமாய் எதிர்பார்த்து நிறுத்தி வைத்திருந்தார். முன்புறம், பின்புறம், வலதுபுறம் என மும்முனைகளிலிருந்தும் புலிகளின் அணிகள் திருப்பித் தாக்குதல் தொடங்க, நிலைகுலைந்து போனது ராணுவம். ஒரே வழி இடது பக்கமாய் தப்பியோடி பின்வாங்குவது. இதனை இப்படித்தான் சிங்கள ராணுவம் நடந்துகொள்ளும் என முன்கணித் திருந்த பிரபாகரன் இடதுபக்க நில மனைத்தையும் கண்ணிவெடி வயலாக மாற்றி வைத்திருந்தார். எதிர்பார்த்த படியே கண்ணிவெடி வலையில் ஆயிரக் கணக்கான ராணுவத்தினர் சிதறியோட- உயிரிழப்பு நூற்றுக்கணக்கில், காயம் சுமார் ஆயிரம், கொண்டு வந்த ஆயு தங்கள் இழப்பு, துண்டைக் காணோம், துணியைக் காணோமெனத் தப்பியோடி யது ராணுவம். ஓயாத அலைகள் மூன்று அத்தோடுதான் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர்தான் நார்வே நாட்டின் இடைப் பாட்டிலான அமைதிப் பேச்சுவார்த்தை களுக்கும் அதிபர் சந்திரிகா அரசு ஒத்துக்கொண்டது.

அதுபோலத்தான் 2003-ல் கருணம்மானை பேட்டி கண்டபோதும், தலைவர் பிரபாகரனின் ராணுவ மதி நுட்பத்தை- குறிப்பாக ஓயாத அலை கள்-3 நடவடிக்கைகளில் அவர் காட்டிய திட்டமிடுதல், வியூக வகுப்பு, தலைமைத் துவம், கள வீரம் என பிரபாகரனின் பன்முக ராணுவ ஆற்றல்களை சிலாகித்து சிலாகித்துப் புகழ்ந்தார். ""உண்மையில் ஓயாத அலைகள்-3 இவ்வளவு பெரிய நடவடிக்கையென்று எனக்குத் தெரியாது. திடீரென்று ஒருநாள் கூப்பிட்டு "கருணா இந்த இடத்திலிருந்து (கருணா சொன்ன அந்த இடத்தின் பெயரை நான் மறந்துவிட்டேன். அவரை பேட்டி கண்ட ஒளிநாடாவும் பூஞ்சை பிடித்துவிட்டது. தலைவரோடு கண்ட பேட்டியின் அத்தனை ஒளிநாடாக்களும் தூசிகூடப் படியாமல் இருக்க கருணாவைத் தாங்கிய ஒளிநாடாக்கள் பூஞ்சை பிடித்துப்போனது கவனிக்கத் தக்கதுதான்) -அந்த இடத்திலிருந்து கரிப்பட்ட முறிப்புவரையும் ஆமிக்காரனெ கலைச்சுக் கொண்டு வரமுடியுமா என்று கேட்டார். எனக்கு பெருசா ஒன்றும் விளங்கையில. ஆனா தலைவர் சொன்னா அதில ஏதோ முக்கியத்துவம் இருக்குமென்பது மட்டும் தெரியும். அப்படி கலச்சுக்கொண்டு கரிபட்ட முறிப்புக்கு வந்தா அங்கெ தலைவரே களத்தில் நின்டு வேறு இரண்டு முனைகளி லான சண்டையை வழி நடத்திக்கொண்டிருந்தார். ஓயாத அலைகள் பெரிய நடவடிக்கையென்பது அப்போதுதான் தெரியும்.''

போர்க்களங்களில் நேரடியாக பிரபாகரன் பங்கேற்பதில்லை -இயக்கத்திற்கு தலைமை முக்கியமென்பதால் மிகவும் பாது காப்பான இடங்களில் அதற்குரிய ஏற்பாடுகளுடன்தான் தலை வரை தளபதியர்கள் நிறுத்தியிருப்பார்கள் என்ற எண்ணம் பரவலாக புலம் பெயர் தமிழ் மக்களிடையே உண்டு. அது உண்மை யல்ல. பெரும்பாலும் களத்திலோ, களத்திற்கு வெகு அருகிலோ நிற்கிற, நின்று நெறி செய்கிற கட்டளைத் தலைமைத் தளபதி யாகவே அவர் இருந்திருக்கிறார். அவரிடமே இதுபற்றி நான் வினவியபோது, அவர் சொன்ன பதில் இனிமையும் நகைச் சுவையும் கொண்டதாயிருந்தது: ""போர் நடக்கையிலெ என்ட பாதுகாப்பு எல்லோருடைய பாதுகாப்பையும் போல அப்படியும் இப்படியும்தான். ராணுவத்தின் பீரங்கி, எறிகணை, விமானங்கள் யாவற்றினதும் இலக்குத் தூரத்திற்குள்தான் பொதுவாக நானும் நிற்பேன். போராளிகளெ களத்தில் விட்டுவிட்டு கண்காணா தூரத்திலெயோ இடத்திலெயோ நிற்கிறதிலெ எனக்கு உடன்பாடில்லை. என்னால் செய்ய முடியாத எதையும் நான் பிறரைச் செய்யும்படி கேட்பதும் இல்லை.''

ஓயாத அலைகள்-3 உலக ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் பாடமாகவும் சாதனையாக வும் எதிர்காலத்தில் பார்க்கப்படுமென்பது என் துணிவு. ஓயாத அலைகள் பற்றின அறிதல் இல்லாத வாசகர்களுக்காக அதுபற்றி சிறிது எழுதுகிறேன். 1995 இறுதியில் யாழ்குடாவை இலங்கை ராணுவம் புலிகளிடமிருந்து கைப்பற்றி தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. புலிகள் தங்கள் அணிகளோடும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களோடும் வன்னிக்கு இடம் பெயர்ந்தனர். யாழ் குடாவை ராணுவம் கைப்பற்றியபோதும் கொழும்பிலிருந்து யாழ்குடாவுக்கான ஏ-9 தரைவழியை ராணுவத்தால் முழு மையாக மீட்க முடியவில்லை. தரை வழியை திறக்கும் நோக்குடனும், 2009 மே 17,18-ல் முள்ளிவாய்க்காலில் நடத்தியதுபோல புலிகளை அதே முல்லைத்தீவில் முற்றுகையிட்டு அழிக்கும் நோக்குடனும் பன்முனை ராணுவ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அவற்றைப் புலிகள் முறியடித்து வெற்றிவாகை சூடிய வரலாறுதான் ஓயாத அலைகள் 1,2,3. ஓயாத அலைகள் 1-ன் மூலம் 1996-ம் ஆண்டு முல்லைத்தீவு ராணுவ முகா மை வீழ்த்தி பேரளவு ஆயுதங் களை புலிகள் அள்ளியெடுத் தனர். 1998-ல் அதுபோலவே கிளிநொச்சி பெரும் முகாமை வென்றனர். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிகப் பெரும் ராணுவ நடவடிக்கை யான ஓயாத அலைகள்-3 தொடங்கியது.

சார்லஸ் அன்றணி பிரிகேட், ஜெயந்தன் பிரிகேட், சோதியா பிரிகேட், மாலதி பிரிகேட், இம்ரான் பாண்டியன் சிறப்பு படையணி, சிறுத்தைகள் சிறப்பு படையணி, எல்லைப் படையணி, கரும்புலிப் படையணி, கிட்டு பீரங்கிப் பிரிவு, குட்டிஸ்ரீ மோர்ட்டர் பிரிவு, "விக்டர்' -டாங்குகள் அழிக்கும் அணி -என புலிகளின் அத்தனை பிரிவுகளும் மரபு ரீதியான ராணுவத் தன்மைகளுடன் பங்கேற்றுக் களமாடிய நீண்ட போர்தான் ஓயாத அலைகள்-3.

நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு ஒட்டுசுட்டான் ராணுவ முகாம் மீது புலிகளின் அணிகள் சீறிப் பாய்ந்தன. விடிவதற்குள் முகாம் புலிகளிடம் வீழ்ந்தது. 800-க்கும் மேலான ராணு வத்தினர் கொல்லப்பட்டனர். அடுத்தநாள் நெடுங்கேணி ராணுவ முகாம் சரிந்தது. இரண்டே நாட்களில் 30 சதுரகி.மீ. நிலப்பரப்பை ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர் புலிகள்.

நவம்பர் 5-ம் நாள் ஆயிரத்திற்கும் மேலான ராணுவத் தினரை அழித்து அம்பகமம் பெரு முகாமை கட்டுக்குள் கொண்டு வந்த புலிகள், அதே வேகத்தில் அடுத்த நாள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கரிப்பட்ட முறிப்பு முகாமிலும் புலிக்கொடி ஏற்றினர். அங்கிருந்து மும்முனைத் தாக்குதல் மூலம் வன்னியின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றான மாங்குளம் ராணுவ முகாமை அழித்து தங்கள் ஆளுகை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நவம்பர் 6-ம் நாள் கனகராயன்குளம்-புளியங்குளம் முகாம் களும் புலிகள் வசம் விழுந்தன.

இலங்கை ராணுவமும் மூன்று முனைகளிலிருந்து திருப்பித் தாக்குதல் தொடங்கியது. புலிகளோ ஓய்கிற நிலையில் இல்லை. போர்க்களம் விரிந்தது. நவம்பர் 14-ம் நாள் மன்னார்-வவுனியா நெடுஞ் சாலையிலுள்ள தள்ளாடி முகாம் தள்ளாடி யது. பேரளவு ஆயுதங்களை புலிகள் அள்ளிக்கொண்டனர். மறுபுறம் யாழ்குடா வடமராட்சி கிழக்குப் பகுதியை டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கி குறிவைத்த னர். ஆலியவளை விழுந்தது. தளபதி தீபனின் படையணிகள் ஆனையிறவு வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் பரந்தன் ராணுவ முகாமை டிசம்பர் 17 அன்று தாக்கி 18-ம் தேதியே கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னரங் கப் பாதுகாப்பு அரண்கள் அழிக்கப்பட்ட நிலையில் ஆனையிறவு முகாம் அனாதை யாகி மூன்று கி.மீ. தூரத்தில் நின்றது.

அதன்பின்னர் மார்ச் 17-ம் தேதி உலக ராணுவ வரலாற்றின் மகத்தான நாயகர் களில் ஒருவரான பால்ராஜ் தலைமையில் தாளையடி- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறங்கி 34 நாட்கள் நட்டநடு வெளி யில் விநியோகத் தொடர்போ -பின்வாங்கு தல் வாய்ப்புகளோ இன்றி பல்லாயிரம் சிங்கள ராணுவத்தினரையும் முப்படைகளை யும் எதிர்கொண்டு வீரப்போர் நடத்தி ஏப்ரல் 21-ம் நாள் ஆனையிறவை வீழ்த்திய காவி யக் கதையை முன்பே நான் எழுதிவிட்டேன். அந்த நாயகன் பால்ராஜும் ஒன்றுக்கு நூறு முறை தன் பேட்டியில் தலைவர் பிரபாகர னின் ராணுவ மூளையை மெச்சி மெச்சி வியந்தார்?

அப்படியான பிரபாகரன் எப்படி தப்பிக்க முடியா முள்ளிவாய்க்காலுக்கு தன் படையணிகளையும், மக்களையும் கூடிவர அனுமதித்தார்? பேரழிவு நிகழ்ந்ததெப்படி? பிரபாகரனின் கணக்குகள் பிழைத்தனவா? யாரேனும் துரோகம் செய்தார்களா?

No comments:

Post a Comment