Monday, May 24, 2010
விருதகிரிக்காக ஹாங்காங் போகும் விஜயகாந்த்!
shockan.blogspot.com
தான் முதல்முறையாக இயக்கும் விருதகிரி படத்துக்காகவும் கோடையைக் கழிக்கவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை விமானம் மூலம் ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார்.
20 நாட்கள் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதன் முதலாக விருதகிரி என்ற படத்தை இயக்குவதோடு, அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸுக்காக தேமுதிக மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது.
தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்ததால் விருதகிரி படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார் விஜயகாந்த். பாடல் காட்சிகள் ஹாங்காங் நாட்டில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக விஜயகாந்த் படப்பிடிப்பு குழுவினருடன் நாளை அதிகாலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து ஹாங்காங் செல்கிறார்.
ஹாங்காங் நாட்டில் விருதகிரி படத்தின் பாடல் காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிற்கு 20 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் விஜயகாந்த் இன்று திங்கள்கிழமை தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment