Tuesday, May 25, 2010
ராஜ்யசபா தேர்தல்-கூட்டணி கட்சிகளுடன் ஜெ அவசர ஆலோசனை: வைகோ போட்டியில்லை!
shockan.blogspot.com
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று கூட்டணி கட்சியான மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.மகேந்திரன், கோபு ஆகியோர் இன்று மாலை போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
ராஜ்யசபா தேர்தல் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
சீட் கேட்ட வைகோ-தா.பாண்டியன்?:
ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது.
இப்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணி 4 இடங்களையும், அதிமுக கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்ற முடியும்.
அதிமுக தன் சொந்த பலத்தில் ஒரு இடத்தையும் இன்னொரு இடத்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவுடனும் தான் வெல்ல முடியும்.
இதற்கிடையே அதிமுக அணி வெற்றி பெற வாய்ப்புள்ள இரண்டாவது இடத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் குறி வைத்ததாகத் தெரிகிறது.
இந்த இடத்தில் தங்களை நிறுத்துமாறு இருவரும் ஜெயலலிதாவிடம் கோரியதாகக் கூறப்படுகிறது.
இப்போது பதவிக் காலம் முடியும் 6 எம்பிக்களில் 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். 4 இடங்களை இழக்கும் அதிமுகவால், தோழமைக் கட்சிகள் ஆதரவளித்தால் கூட 2 இடங்களை மட்டுமே மீண்டும் பெற முடியும்.
அதிலும் ஒரு இடத்தை தோழமைக் கட்சிக்கு விட்டுத் தர ஜெயலலிதா தயாராக இல்லை.
இந் நிலையில் தான் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு அதிமுக தலைமை கடிதம் அனுப்பியது.
ஆதரவு கேட்டு கடிதம் எழுதிவிட்டதால், இனி தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தாது என்று அதிமுக கருதியது.
ஆனாலும் வைகோவும் தா.பாண்டியனும் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து சீட் கேட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை நடத்தினார்.
வைகோ போட்டியில்லை!:
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,
அடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 2 இடங்களிலும் போட்டியிடும். இதற்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, ஆதரவு தெரிவிக்க அவரை சந்தித்தோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.
நீங்கள் போட்டியிடவில்லையா என்று கேட்டதற்கு, ஆதரவு என்று சொல்லிவிட்டோமே, அப்புறம் எப்படி போட்டியிட முடியும் என்றார் சிரித்தபடியே.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற மகேந்திரன் கூறுகையி்ல், ராஜ்யசபா தேர்தலுக்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று அவரை சந்தித்தோம். அதிமுகவுன் எங்கள் கூட்டணி தொடரும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை எதிர்க்கும் வகையில் அதிமுக கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றார்.
27ம் தேதி மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் நிலையில் இனறைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment