Tuesday, May 25, 2010
திமுகவில் சேருகிறார் முத்துசாமி!
shockan.blogspot.com
எம்ஜிஆர் விசுவாசிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி திமுகவில் இணைகிறார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்றவர் முத்துசாமி. இவரது காலத்தில், இந்திய அளவில் போக்குவரத்துத் துறையில் தமிழகம் மிகச் சிறந்த இடம் பெற்றிருந்தது.
பின்னர் 1991-96ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்த பகுதியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அதிமுக தொண்டர்களிடமும் இவருக்கு நல்ல மரியாதை உண்டு. தற்போது அதிமுக மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட அதிமுக பொறுப்பாளராகவும் உள்ளார்.
மிகச் சிறந்த நிர்வாகியான முத்துசாமியை அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா நீண்ட காலமாகவே ஒதுக்கி வைத்துள்ளார். ஆனாலும், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தார் முத்துசாமி.
ஆனால், இப்போது அவரே வெறுத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. இதனால் கட்சிப் பணிகளில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் கல்விப் பணிகளில் மூழ்கியிருந்தார் முத்துசாமி.
இந் நிலையில் முத்துசாமி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர முடிவு செய்துள்ளார். அவருடன்
முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஈரோட்டைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் தொண்டர்களுடன் திமுகவில் இணைகின்றனர்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் முறைப்படி இணைய முத்துசாமி முடிவு செய்துள்தாகவும், இணைப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் கொங்கு மண்டலத்தில் மிகவும் வீக்காக உள்ள திமுகவுக்கு பெரும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment