Tuesday, May 18, 2010
கடைசி நேரத்திட்டம்! -ஜெகத் கஸ்பர்
shockan.blogspot.com
இடைவிடா தேடல்கள் நிறைவு தரும். தமிழீழ அரசியற்சிந்தனைப் பரப்பில் நான் மிகவும் மதித்த பாலகுமாரன் அவர்கள் இருக்கிறாரா... இல்லையா என்ற எனது தேடல் பற்றியும், அவர் உயிரோடிருக்கும் வாய்ப்பு இல்லை என்பதாகவும் முன்பொரு முறை எழுதியிருந்தேன். எனினும் என் தேடலை விடவில்லை. இப்போது கிடைத்திருக்கிற ஓரளவுக்கு நம்பலாம் என்ற தகவலின்படி அவர் ஒரு கால் இழந்த நிலையில் உயிரோடிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அவ ரோடு புலிகளின் அரசியற்பிரிவில் கடமையாற்றிய சிலர் இருப்பதாகவும் அத்தகவல் தெரிவித்தது. கெடுபிடியான பாதுகாப்போடு இரகசியமான ஏதோ ஓர் இடத்தில் ராணுவம் இவர்களை அடைத்து வைத்துள்ளதாய் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
கடந்த ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட கே.பி. இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என பல நண்பர்கள் கேட்பதுண்டு. எனக்குத் தெரிந்து அவரும் இறுக்கமான ராணுவக்கட்டுப்பாட்டில்தான் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் முரண்டு பிடிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்து புனர்வாழ்வு பணிகளில் ஈடுபடுத்தலாமா என்று ராஜபக்சே நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பாதுகாப்பில் எப்போதுமே மிகவும் கவனமாயிருக்கும் கே.பி. கைது செய்யப்படும் நிலை எப்படி உருவாகியது என்ற கேள்வி இன்றுவரை தமிழர்களால் விவாதிக்கப்படும் ஒன்று. முள்ளி வாய்க்காலில் மே-18 அன்று ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததோடு அவர்களின் கட்டளை கட்டமைப்பு (Command Structure) சிதறியது. தோல்வியில் நிற்கும் ஓர் ராணுவ அரசியல் இயக் கம் எத்துணை விரைவாக தன் கட்டளை கட்டமைப்பை மீளாக்கம் செய்கிறதோ, அதனைப் பொறுத்தே அவ்வியக்கத்தின் மறு உயிர்பெறு தலும் அமையும். அதனைக் கருத்திற்கொண்டு தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலகப் பொறுப்பாளராக தேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காலுக்கு முன் நியமித்த கடிதத்தை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு முன் நகர முயன்றார் கே.பி.
அதுவரை திரைமறைவிலேயே இயங்கி வந்த அவர் வெளிப்படையாக முக்கியமான பல தமிழர்களை சந்திக்கத் தொடங்கினார். தன்னை ஓரங்கட்டியது மட்டுமல்லாமல் அனைத்துலக அரங்கில் புலிகள் இயக்கம் மீது வெறுப்பு அதிகரிக்கக் காரணமாயிருந்த காஸ்ட்ரோ குழுவினர் முந்திக் கொள்ளுமுன் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட அவசரம் காட்டினார் கே.பி. அந்த அவசரமே அவருக்கு வினையானது.
அனைத்துலக அளவில் மட்டுமல்லாது- களத்திலும் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்கத் தேவையான தொடர்புகள் கே.பி.க்கு உண்டு என்பது இலங்கை அரசுக்குத் தெரிந்திருந்ததால் அவரை முடக்குவதில் அதீத ஆர்வம் காட்டியது. இன்டர்போல் உதவி யோடு அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்பது முதல் கருது கோள். காஸ்ட்ரோ குழுவினர் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்பது இரண்டாம் கருதுகோள். சீன நாட்டின் உளவுத்துறை தான் துல்லியமாகத் திட்டமிட்டு அவரை அமுக்கியதென்பது இன்னொரு கருதுகோள். என்னைப் பொறுத்தவரை கே.பி. அவசரப்பட்டு வெளிப்படையாக தமிழ் மக்களை சந்திக்கத் தொடங்கியதை தவிர்த்திருக்கலாம். ஒரு கட்டத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வகித்த இடத்தில் கே.பி. தன்னை நிறுத்திப் பார்க்க முயற்சித்தது போன்ற தோற்றம் தெரிந்ததாகவும் புலம்பெயர் தமிழ் மக்கள் பலர் குறைபட்டுக் கொண்டனர்.
எனினும் ஆனையிறவு வெற்றிவரை புலிகளின் ஆயுத கொள்வனவு-விநியோக தேவைகளை நிறைவு செய்த அவரது ஆற்றல் சாமான்யப்பட்டதல்ல. பொருத்தமான ஆயுதங்கள் வாங்க வேண்டும், அதற்குரிய பெரும் பணம் திரட்ட வேண்டும், சட்டப்பூர்வமான வெளிச் சந்தைகளில் வாங்க முடியாது- ஆதலால் ஆயுத வியாபாரிகளுக்கு ஏதோ ஒரு நாட்டின் தேவைக்காகத்தான் இவையெல்லாம் வாங்கப் படுகின்றன என்று காட்டும் ஆவணங்கள் நம்பிக்கை ஏற்படும் வகை யில் தயாரிக்கப்பட வேண்டும், அனைத்துலக ஆயுத வியாபாரிகள் தீர்மானிக்கும் கடல் அல்லது நிலப்பகுதியில் ஆயுதங்களை கையேற்க வேண்டும், பண ஏமாற்று, தரமற்ற ஆயுதங்களைத் தந்து ஏமாற்றுதல் போன்றவற்றிலிருந்து மிகக் கவனமாய் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், கையேற்ற ஆயுதங்களை அனைத்துலக கடற்பரப்புக்குக் கொண்டு சென்று பெரிய கப்பல்களில் ஏற்ற வேண்டும், அந்தந்த நாடுகளின் கடற்படை, கடலோர காவல், செயற்கைகோள் கண் காணிப்பு அனைத்திலிருந்தும் தப்பி நடத்தி பத்திரமாய் நடுக் கடலுக்குள் சேர்க்க வேண்டும், ஆயுத வியாபாரிகள் போலவே நடித்து உலவும் முக்கிய உலக நாடுகளின் உளவாளிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வேண் டும்- இதற்கான பெரும் பணத்தை பாதுகாப்பாய் இட மாற்றம் செய்ய வேண்டும்... இவையெல்லாம் சராசரி மனிதர் களால் செய்யப் படக்கூடியவை அல்ல. உண்மையில் அது ஓர் பன்முகத்தன்மை கொண்ட ஓர் கலை. அதனை அற்புதமாய் 2001-ம் ஆண்டு வரை செய்தவர் கே.பி.
இன்று அவர் ராஜபக்சே அரசோடு ஒத்துப்போகும் அணுகுமுறையை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல்- தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழ் மக்க ளுக்கு உதவ முயலுதல் ஆகிய நோக்கங் களோடு எடுக்க முற்படலாம். உண்மையில் இன்று ஈழத்தமிழ் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று கொழும்பு அதிகாரவர்க்கத்தோடு தொடர்பு கொள்ள சம்பந்தனார் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து வேறு தலைவர்கள் இல்லாமை. அந்த இடைவெளியை கே.பி. போன்றோர் நிரப்புவது தற்காலிகமாக தமிழர்களுக்கு நல்லதுதான்.
முள்ளிவாய்க்கால் களமுனையில் நின்ற பிரபாகரன் அவர்களும் சில முக்கிய தளபதியர்களும் தப்பிச் செல்ல பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், அவற்றில் ஒரு திட்டத்தை முக்கிய திட்டமாக கே.பி. வடிவமைத்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இவற்றின் உண்மைத்தன்மை நமக்குத் தெரியாது. ஆம் -அப்படித்தான் என்று உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் எவரும் நம் மோடு நேரடி தொடர்பில் இல்லை. ஆங் காங்கு சிறு சிறு துண்டுகளாய் கிடைப்பவற்றைக் கொண்டு ஒரு காட்சியை நம்மால் ஓரளவுக்கு கட்டமைவு செய்ய முடியும். அப்படிப்பட்டதுதான் இந்தச் செய்தியும். எரித்ரேய நாட்டு ராணுவத் தளபதிகளின் ஆலோசனைத் துணையோடு இத்திட்டம் தீட்டப்பட்டதாய் கூறப்படுகிறது.
ஈழத்தமிழர்களைப் போலவே மிகப் பெரிய தியாகங்கள் செய்து எத்தியோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை சாதித்தவர் கள் எரித்ரேய மக்கள். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நேயத்துடன் புரிந்து கொண்ட வெகுசில நாடுகளில் எரித்ரேயாவும் ஒன்று. யுத்தம் மூர்க்கமடைந்து கொண்டு போன நாட்களில் எரித்ரேயாவின் ராணுவத் தளபதிகள் வன்னி போர்க்களத்தோடு நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் செய்திகள் உண்டு. உண்மையில் மக்களை தங்களோடே புலிகள் வைத்திருக்க வேண்டுமென்ற யோசனையை வலியுறுத்தியது எரித்ரேய தளபதிகள்தான் என்று சொல்கிறார் கள். மக்கள் முழுமையாக இலங்கை ராணு வத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்களென் றால் அதற்குப்பின் போர் எப்படி முடிந்தாலும் அதுபற்றி உலக நாடுகள் அக்கறை காட்டாது என்பதுதான் எரித்ரேய தளபதிகளின் அறிவுரைக்கான காரணம். ஆனால் அந்த தளபதிகளே கூட இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள் மீது இத்துணை கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணியுமென எதிர்பார்த்திருக்கவில்லை என்று சொல்லப் படுகிறது. ஏனென்றால் மிக மோசமான சர்வாதிகாரிகள் கூட அப்பாவி மக்கள் மீது ராஜபக்சே சகோதரர்கள் நடத்தியது போன்ற பேரழிவுத் தாக்குதலை நடத்தியதாக கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இல்லை.
கே.பி. வடிவமைத்த திட்டத்தின்படி புலிகளின் அதி ரகசியமான பிரிவுகளில் ஒன்றான நீர்மூழ்கி அணி முதற்கட்ட பணியினைச் செய்யும். போர் உக்கிரமடைந்த அக்காலக் கட்டத்தில் புலிகளிடம் இயங்கு நிலையில் மிகச் சிறிய ரக நீர்மூழ்கிப் படகுகள் இரண்டு இருந்ததாய் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையா, பொய்யா என்பதை உறுதி செய்ய நம்மிடம் தரவுகள் இல்லை. கடற்புலிகளின் சிறப்பு அணியான கடல் அடி நீரடிப் பிரிவினர் முன்னரங்க வேலை களைச் செய்ய, நீர் மூழ்கிப் படகொன்றில் இலங்கை கடற்படையின் முற்றுகையை ஊடறுத்து பிரபாகரனும் முக்கிய தளபதி களும் நகர்ந்தபின் அனைத்துலக வானூர்தி ஓட்டிகளால் (டண்ப்ர்ற்ள்) இயக்கப்படும் மூன்று வானூர்திகள் (ஐங்ப்ண்ஸ்ரீர்ல்ற்ங்ழ்ள்) அவர்களை நடுக்கடலில் வைத்து ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு- திருகோணமலை அல் லது மணலாறு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தரையிறங்குவதாகத் திட்டம் வகுக்கப்பட்டதாய் தெரிகிறது. வெளிநாடு ஒன்றிற்கு செல்லும் யோசனையை கே.பி. வலியுறுத்தி முன் வைத்ததாகவும், ஆனால் ""மண்ணையும் மக்களையும் விட்டு என் உடலைக் கூட நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது'' என பிரபாகரன் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரே அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தரையிறங்கும் திட்டம் ஆகியிருக்கிறது.
அனைத்துலக வானூர்தி ஓட்டுநர்கள் இயக்கும் அந்த மூன்று வானூர்திகளுமே இலங்கை விமானப் பிரிவின் ஊர்திகள் போலவே தோற்றமளிக்கும்படி வண்ணம் தீட்டப்பட்டு விமானப்படை முத்திரைகளும் அதில் பொறிக்கப்படுவதுவரை துல்லியமாகத் திட்டம் வகுக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறது. கடைசியாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை. இத்திட்டத்திற்குத் தேவையான பணப் பிரச்சினைதான் திட்டத்தை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தி, கைவிட வேண்டிய நிலையை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மூன்று வானூர்திகளையும் இப்பணிக்கு கொடுக்க ஒத்துக் கொண்ட வெளிநாட்டு நிறுவனம் வாடகையாய் 35 லட்சம் டாலர்கள் குறித்து முன்பணமாய் 10 லட்சம் டாலர்கள் கேட்டிருக்கிறது. வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தின் பணத்தை முற்றாகக் கட்டுப்படுத்தியவர்கள் காஸ்ட்ரோ குழுவினர். உரிய நேரத்தில் இப்பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் இழுத்தடித்தனர் என்பது கே.பி. தரப்பினரின் குற்றச்சாட்டு. பின்னர் அவர்கள் பணம் ஏற்பாடு செய்ய முன்வந்தபோது கடற்சூழல் மிகவும் இறுக்கமடைந்து திட்டம் செயற்படுத்த முடியாதென அந்த வெளிநாட்டு நிறுவனம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை நாம் தவிர்த்திருக்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment