Saturday, May 1, 2010
காதல்... ப்ளாக்மெயில்... கொலை!
shockan.blogspot.com
பவானி டாஸ்மாக் பாரில் 18-ந் தேதி இரவு 8.30-க்கு தனது நண்பர்களுடன் சியர்ஸ் சொல்லியபடியே போதை ஏற்றிக்கொண்டி ருந்தார் மினிவேன் ஓட்டுநரான கார்த்தி கேயன். அப்போது செல்போன் மணி ஒலிக்க போனை ஆன் செய்த கார்த்திகேயனுக்கு இன்ப அதிர்ச்சி. எதிர்முனையில் கார்த்திகேயனின் காதலி கிருத்திகா.
""எங்கே இருக்கீங்க?''
""டேய் செல்லம் இங்கதாண்டா பவானியில...''
""சரி வீட்டுக்கு வர்றீங்களா இங்க யாரும் இல்லே...''
""இதோ இப்ப அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேன்.''
போன் பேசி முடித்த கார்த்திகேயன் ""டேய் மாப்ள! கிருத்திகா கூப்பிடுறா என்னோட வர்றீங்க ளாடா...'' என உடனிருந்த நண்பர்களை அழைக்க ""வேண்டாம் மாப்ள... எல்லாரும் சரக்கு அடிச்சிருக் கோம்'' என மறுத்துவிட்டனர் நண்பர்கள். கார்த்தி கேயனின் சித்தி மகன் சக்திவேல், ""அண்ணா நான் கூட வர்றேன்'' என டூவீலரில் ஏறிக்கொள்ள கார்த்திகேயனும் சக்திவேலும் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள கிருத்திகாவின் தோட்டத்து வீட்டை நோக்கி பறந்தனர்.
இரவு 10 மணிக்கு மேட்டூர் செல்லும் வழியில் அம்மாபேட்டை அருகே சாலை யோரத்தில் இரண்டு நபர்கள் இறந்து கிடக்க, சம்பவ இடத்துக்குப் போன போலீசார் இரு வரது உடல்களையும் பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பிணமாகக் கிடந்த இருவரும் கார்த்திகேயனும் சக்திவேலும்தான்.
குடிபோதையில் ஏற்பட்ட விபத்து என போலீஸ் நினைக்க இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மை தகவல் வெளியாக... பவானி சுற்று வட்டாரப் பகுதியே பதட்டமடையத் தொடங்கியது.
காதலி வீட்டுக்குப் போனவர்கள் கொலையானது எப்படி?
போலீஸ் காவலில் இருந்த கிருத்திகாவே நம்மிடம் தொடர்கிறார். ""நான் இப்போது திருச்செங்கோட் டில் உள்ள ஒரு கல்லூரியில் இஞ் ஜினியரிங் படிக்கிறேன். பவானி கிரேஸ் ஸ்கூல்ல நான் படித்தபோது எனது வகுப்புத் தோழி மூலமா கார்த்திகேயன் அறிமுகமானார். அடிக்கடி சந்தித்தோம், பழகினோம். காதலித் தோம் என்பது உண்மைதான். நாங்கள் கவுண்டர் சமூகம், கார்த்திகேயன் தன்னை கவுண்டர் என்றார். ஆனால் அவர் வன்னியர் சமுகம். அதேபோல டிராவல்ஸ் ஏஜென்சி வைத்திருப்பதாகக் கூறினார். உண்மையில் அவர் ஒரு டெம்போ டிரைவர். ஆரம்பத்தில் எல்லாமே என்னிடம் பொய் பொய்யாக கூறினார். எல்லாவற்றையும் நான் நம்பிவிட்டேன். அதுவும் மிகப் பெரிய குடிகாரர் என்பது எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. எல்லா விஷயத்திலும் அவருக்கு கெட்ட பழக்கம் அதிகமாக உள்ளது. என்வீட்டில் நான்தான் மூத்த பெண். எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளார்கள். கார்த்திகேயன் நட்பினால் என் வாழ்வு மட்டுமல்ல என் குடும்பமும் சீரழிந்துவிடும் என்பதை உணர்ந்தேன். "பழகியது தப்புதான் பிரிந்து விடுவோம்' என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். உன்னை அடையாமல் விடமாட்டேன். எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்காமல் கொன்றுவிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தான். தொடர்ந்து பிளாக்மெயில் செய்தான்... வேறு வழி தெரியவில்லை...'' என கண்ணீருடன் முடித்துக்கொண்டார் கிருத்திகா.
""என் மகளுக்கு உன்னை பிடிச்சிருந்தால் நாங்களே திரு மணம் செய்து வைக்கிறோம் ஆனால் சுத்தமாக பிடிக்க வில்லை என்கிறாள், விட்டுவிடு தம்பி என நாங்களும் கெஞ்சினோம். அதற்கு அந்தப் பையன், என் மக ளோடு ஜோடியாக நின்று எடுத்த போட்டோவைக் காட்டி "உன் சொந்த பந்தம் எல்லோ ருக்கும் அனுப்பு வேன், ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவேன்'னு மிரட்டினான். ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பஞ்சாயத்து பேசினோம். ஒரு லட்சம், ரெண்டு லட்சம் கேட்டால் பரவாயில்லை. பல லட்சம் கேட்டான். அறியா வயதில் ஏற்பட்ட உணர்வை பயன்படுத்தி ஜோடி போட்டோ எடுத்துக் கொண்டு பணம் கேட்டு ப்ளாக்மெயில் செய்பவ னுக்கு ஒரே தண்டனைதான்... அப்போதுதான் என் குடும்பம் நிம்மதிபெறும் என்று நினைத்து கிருத்திகா மூலமே என் வீட்டுக்கு வரவழைத்தேன். குடிபோதையில் வந்தவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தான். மண்வெட்டியை எடுத்து ஒரே போடாகப் போட்டேன். சுருண்டு விழுந்துவிட்டான். கூடவந்த பையன் வீட்டுக்கு வெளியே இருந்து உள்ளே ஓடிவந்தான். அவனையும் போட்டுத் தள்ளிவிட்டோம்'' என்றார் கிருத்திகாவின் தந்தை சண்முகம்.
கிருத்திகாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து இருவரையும் கொலை செய்து பிணங்களை மேட்டூர் ரோட்டில் கொண்டுபோய் போட்டுள்ளது.
காதலை கைவிடவும், போட்டோவை ஒப்படைக்கவும் நடந்த பேரத்தில் 14 லட்சம் வரை பேசப்பட்டுள்ளது. இருவருக்கும் சமா தானம் பேசிய பவானி தி.மு.க. நகர செயலாளர் ப.சீ.நாகராஜ் ""இப்போது முக்கிய வேலையாக சென்னையில் இருக்கிறேன்'' என்றார் நம்மிடம்.
காதல், ப்ளாக்மெயில், கட்டப்பஞ்சாயத்து பேரம்... அதனையடுத்து கொலை என நீண்டு கொண்டே போகும் இவ்விவகாரம் கவுண்டர், வன்னியர் சமூகம் என சாதிய பகைத் தீயையும் மூட்டியுள்ளது. பழிக்குப் பழி என்ற வார்த்தைகள் பலமாக ஒலிக்கிறது பவானியில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment