Friday, May 14, 2010
சொல்லக்கூடாத ரகசியம்!
shockan.blogspot.com
இப்படியும் ஒரு தெய்வமா? இப்படியும் ஒரு தெய்வமா? வியப்பூட்டும் விஷயம்தான்.
மனதால் நினைத்து சில சமயம் வாய்விட்டுச் சொல்லி பிரார்த்தனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களையும், கோயில்களையும், தெய்வங்களையும் பற்றி கண்டு கேட்டு எழுதியிருக்கிறோம்.
ஆனால் மோகனூர் தெய்வமான ஜட்ஜ் நவலடியானும் பக்தர்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள்.
""குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், கலெக்டருக்கும் மனு எழுதற மாதிரி அப்ளிகேஷன் எழுதி, பெறுநர், ஜட்ஜ் மோகனூர் நவலடியான்னு முகவரியும் எழுதி பூசாரிக்கிட்ட கொடுப்பாங்க, கருவறையில் நின்று அந்த மனுவை முழுக்க சாமியிடம் படிச்சுச் சொல்லிவிட்டு மனுவைச் சுருட்டி அதில் கோயில் முத்திரையைக் குத்தி, சாமி தலைமாட்டில் கயிறில் கட்டிப்போடுவார். இப்படி பல லட்சம் மனுக்கள் நவலடியான் தலைக்கு மேல கட்டியிருக்கு. தாய், தந்தையிடம், கணவரிடம் சொல்ல முடியாத எத்தனையோ ரகசியங்களைக்கூட மனுவில் பக்தர்கள் எழுதியிருப்பாங்க'' மோகனூர் நவலடியான் கோயில் பற்றி பல பக்தர்கள் நம்மிடம் சொன்னார்கள்.
இந்த அதிசய ஜட்ஜ் கடவுளை நேரில் சந்திக்கப் புறப்பட்டோம்.
நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் பேருந்து ஒன்றில் நாம் பயணம் செய்து கொண்டிருக்க நம் அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் அவனின் கைப்பையை எடுத் தான். அதற்குள் இருந்த ஒரு கவரை எடுத்துப் பார்த்தான். ஏதோ விண்ணப்பம் போல இருந்தது. சில நிமிடம் நம் பார்வை படாதபடி ரகசியமாக அதை படித்தவன் பிறகு அதை மூடி அந்த கவருக்குள் வைத்தான். கவரை பவ்வியமாக தொட்டு கும்பிட்டான். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கவரை எடுத்தான், பிரித்தான், படித்தான், கும்பிட்டான், அதை மூடி பையுனுள்ளேயேவைத்தான். இப்படியே மூன்று நான்கு முறை அவன் செய்ய, அப்படி என்னதான் அந்த விண்ணப்பம்? யாருக்கு கொடுக்கப் போகிறான்? நாம் கேட்டதும்,
""ஜட்ஜ் நவலடியானுக்கு'' என்றான். தொடர்ந்து ""நீங்க ஊருக்கு புதுசா இருக்கீங்க, வாங்க நானே கூட்டிட்டுப் போறே''னு... உடன் அழைத்துச் சென்றான். மோகனூரிலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் வழியில் நவலடியானின் பழைமையான கோயில்.
""வேகமாக கோயிலுக்குள் சென்று விட்டான் அந்த இளைஞன். நாமும் அவனை பின்னோக்கியே சென்றோம்.
நவலடியான் ஜட்ஜ் என்பவர் மக்கள் வழிபடும் ஒரு தெய்வம். வழக்கமாக எல்லா கோயில்களிலும் மக்கள் தங்கள் வேண்டுதல் களை மனதில் நினைத்துக் கொண்டு கடவுளிடம் பிரார்த்திப்பார்கள். ஆனால் இங்கோ ஒரு கோரிக்கை மனுவாக எழுதி அதை நவலடியான் சாமியிடம் படித்துக் காட்டி அப்படியே அந்த மனுவை ஒரு கயிற்றில் கட்டி விட்டு வருகிறார்கள். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல லட்சக்கணக்கான மனுக்கள் வரிசையாக கயிற்றில் கட்டப்பட்டு இருந்தன.
""...அய்யா, நவலடியானே... நான் என் மாமனைத்தான் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் என் அப்பா எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். இந்த வருடம் கல்லூரி படிப்பு முடிந்ததும் என் மாமனோடு எனக்கு திருமணம் நடக்க வேண்டும். அது உன் கையில்தான் உள்ளது'' என எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் எழுதிய பெண்ணின் பெயருடன் ஈரோடு என உள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுதி வைத்துள்ள மனுவில் ""என் கணவர் நல்லவ ராகத்தான் இருந்தார். ஆனால் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அந்த சித்ராவை பார்த்ததிலிருந்து அவளே கதி என கிடக்கிறார். எப்படியா வது என் குடும்பத்தை சீர்குலைக்கும் சித்ராவிட மிருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள் நவலடியானே...''.
இன்னொரு மனுவில் ""நான் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் ஏழாவது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். என் மனைவி ஒரு காமப் பிசாசாக இருக்கிறாள். தோற்றத்தில், உடலமைப் பில்தான் அவள் ஒரு பெண். நடவடிக்கையில் முரட்டுத்தனமான ஒரு ஆண் போல உள்ளாள். இந்த பதினைந்து வருட குடும்ப வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. என் மனைவிக்கு காம உணர்வு குறைய வேண்டும் அது உன்னிடம்தான் உள்ளது!'' -ஒரு கொடூர மனைவியின் பிடியிலிருந்து விடுபட வேண்டி திருச்சியைச் சேர்ந்த பரிதாப கணவன் ஒருவரின் மனு இது.
""அய்யா வேட்டைக்கு புறப்படும் நவலடியான் சாமீ! எங்க மூதாதையர்கள் எல்லாருக்கும் 4 புள்ளை 5 புள்ளை... எனக்கு கல்யாணமாகி 10 வருஷமாச்சு. புள்ளையில்லை. நான் படுற வேதனை உனக்குத்தான் தெரியும். சொந்தக்காரங்க பார்க்கிற பார்வையில மலட்டுச் சிறுக்கி இங்கே எதுக்கு வந்தாள்னு எழுதி ஒட்டீருக்கு தெய்வமே! இன்னும் எவ்வளவு காலத்துக்கு என்னைச் சோதிக்கப்போறே என் தெய்வமே?'' -இந்த மனுவை எழுதி கையெழுத்திட்ட லட்சுமி திருச்சி மலைக்கோட்டைப் பகுதிக்காரர். ""நான் என் கணவருக்கு துரோகம் செய்து விட்டேன். எப்படியோ அந்த பஸ் டிரைவரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது அவனிடமிருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்கிறேன். அவன் மிரட்டுகிறான். எனது ஒரே வேண்டுதல் அவன் ஓட்டும் பஸ் ஆக்சிடெண்ட்டாகி அதில் அவன் மட்டும் சாக வேண்டும். அப்பாவியான என் கணவருக்கு இனிமேலாவது நான் நல்ல மனைவியாக இருக்க வேண்டும்'' -இப்படி கண்ணீரை சிந்தி எழுதியிருந்தார் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்.
""இந்த ரகசியத்தையும், உண்மையையும் நான் எப்போதும் யாரிடமும் என் இறப்பு வரை கூற முடியாது நவலடியானே! உன்னிடம் தான் தைரியமாக கூற முடியும். திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அவனுக்கு இரண்டு வயது நிரம்பிவிட்டது. என் குடும்பத்தில்... என் கணவர் குடும்பத்தில்... எல்லோரும் மகிழ்ச்சியாக "குழந்தை என் கணவ ரைப் போன்றே உள்ளது' என கூறுகிறார்கள். சத்தியமாக மன்னித்துவிடு நவலடியானே, என் குழந்தை என் கணவருக்குப் பிறக்கவில்லை. என் கணவரின் சித்தி மகனுக்கு பிறந்ததுதான். அவருக்கு தம்பி முறையாகிறது. அண்ணி, அண்ணி என்று நெருங்கி பழகினான். என்ன பாவமோ அவன் அப்போதே ஒரு விபத்தில் இறந்து விட்டான். அவன் குழந்தைதான். கடவுளிடம் எதையும் மறைக்கக்கூடாது என்பதால் உன்னிடம் கூறிவிட்டேன். இனி இந்த ரகசியத்தை காப்பாற்றுவது உன் பொறுப்புத் தான்'' -இந்த மனுவை வைத்திருந்த பெண் துறையூர் தாலுகா என எழுதியிருந்தார்.
""எவ்வளவு நாளைக்கு இப்படி பசியும் பட்டினியுமாக தவிக்கணும்? இந்த ஊர்லயே நாங்கதான் பெரிய கோடீஸ்வரரா மாறணும். ஏழைபாளைகளுக்கு உதவணும். எங்களை பணக்காரராக்கு நவலடியா!'' -இது சேலம் பெரியசாமி என்பவரின் மனு.
""என் அம்மாவுக்கு ஒரு காலும் கையும் விளங்கலை. எங்க 3 பசு மாடுகளும் செத்துப் போச்சு. அடிக்கடி ராத்திரியில வீட்டுக்குள்ள பாம்பு வருது. எல்லாத்துக்கும் காரணம் பக்கத்து வீட்டு காமாட்சியும் அவ புருஷனும் வச்ச செய்வினைதான். அந்த செய்வினையை அவ வீட்டுமேல திருப்பி விடு. அப்படிச் செய்தால்தான் நீ துடியான நவலடியான்'' -இந்த மனுவை எழுதிய சுப்புலட்சுமி கரூரைச் சேர்ந்தவர்.
இப்படி காதல், கள்ள உறவு, குடும்பம் என பல்வேறு ரகசியங்களும், ஆச்சரியங்களும், அதிசயங்களும் பல மனுக்களில் காண முடிந்தது. இன்னும் ஏராளமான மனுக்களில் சொத்து தகராறை தீர்த்து வைக்கக் கோரியும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்றும், நிலப் பிரச்சினையை முடித்துதரக் கோரியும், கணவன்-மனைவி பிரச்சினை, லட்சாதிபதியாக... கோடீஸ்வரனாக ஆகவேண்டும் என மனுக்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
""நவலடியான் கடவுள்தான். இவரை ஜட்ஜ் என்றும், நீதிமான் என்றும் மக்கள் கூறுவதற்கு காரணம் அவர்கள் வைக்கும் கோரிக்கை மனுவை நவலடியான் ஏற்றுக் கொண்டு மூன்று மாதத்திலோ அல்லது அதற்கு மேலும் சில நாட்களிலோ நிறைவேற்றி வைப்பார். பலபேர் நாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறியுள்ளது என மீண்டும் வந்து கூறுகிறார்கள்.
""தருமபுரியைச் சேர்ந்த ஒரு பக்தர். அவரை ஒரு கொலை கேஸ்ல புடுச்சு அடிச்சு சித்ரவதை பண்ணி... ஒத்துக்கிட வச்சாங்களாம். "நவலடியா இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சாட்சியெல்லாம் எனக்கு பாதகமா இருக்குனு வக்கீல் சொல்றாரு. தீர்ப்பு வரப்போகுது. அந்த ஜட்ஜய்யா தலைக்குள்ள நுழைஞ்சு நீதான் எனக்கு சரியான நெஜமான தீர்ப்பு வழங்கணும்'னு ஒரு மனுவை எழுதிட்டு வந்து ஒப்படைச்சிட்டுப் போனார். மறுமாதம் அவரை விடுதலை செஞ்சிடுச்சு கோர்ட். அவரு வந்து மறுபடியும் நன்றி சொல்லி மனு எழுதிக் கொடுத்தார். ஊரெல்லாம் சொன்னார். அதில் இருந்துதான் ஜட்ஜ் நவலடியான்கிற புகழ் இந்த சாமிக்கு நிலைச்சுச்சு. சிலர் மனுவை எங்களிடம் கொடுத்து படித்துக் காட்டி பிறகு கயிற்றில் கட்டி வைப்பார்கள். சிலர் ரகசியம் கருதி மனுவில் உள்ள கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று கூறி படிக்க வேண்டாம் என கூறி விடுவார்கள். நாங்களும் படிக்கமாட்டோம். நவலடியான் என்கிற ரவுண்ட் சீல் வைத்து கயிற்றில் கட்டி வைக்கிறோம். நவலடியானிடம் மனு கொடுத்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கரூர், பெரம்பலூர், பெங்களூர்னு ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துட்டுப் போறாங்க'' என நம்மிடம் நவலடியான் பெருமைகளை கூறினார் கோயில் பூசாரியான கோட்டையன் என்கிற பாலு பூசாரி.
""நல்ல விஷயம் நடக்கணும்னு மனு கொடுத்தா நிச்சயமாக நிறை வேற்றுவார். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து இங்கு வருகிறோம்'' என்றார் கரூரைச் சேர்ந்த வேலுச்சாமி. நாம் பேருந்தில் சந்தித்த இளைஞன் மனு கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்க்கொண்டிருந்தான்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment