Tuesday, April 20, 2010
ஏன் மோடி திடீரென கெட்டவர் ஆனார்?
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் கண்களுக்கு இன்று பெரும் உறுத்தலாக மாறியுள்ளார் மோடி. இத்தனை காலமாக ஐபிஎல் குறித்து யாருமே கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, இன்று மக்கள் மத்தியில் நாம் நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்காகவும், அரசின் தண்டனையிலிருந்தும் தப்பிப்பதற்காகவும் மோடிக்கு எதிராக கிரிக்கெட் வாரியம் திரண்டு எழுந்துள்ளது.
2008ம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முறையாக நடந்த்து. அணிகளை பல நூறு கோடிகளுக்கு ஏலம் விட்டனர். பின்னர் வீரர்களை, ஆடு மாடுகளை ஏலம் விடுவது போல ஏலம் விட்டனர். இத்தனை கோடிக்கு இவர் ஏலம் போயுள்ளார் என்று பெருமையாகவும் கூறினார்கள்.
அதையெல்லாம் கேட்டு மக்கள் வயிறெரிந்தார்கள். இதென்ன விளையாட்டு தானா அல்லது பணம் பறிக்கும் சூதாட்ட வேலையா என்று குழம்பினர் மக்கள். ஆனால் அரசுக்கும், கிரிக்கெட் வாரியத்திற்கும் அது அப்படித் தோன்றவில்லை. மாறாக பெருமையான விஷயமாகவே அதைப் பார்த்தனர்.
ஒரு விளையாட்டு சூதாட்டமாகிறது என்று அப்போது அவர்களுக்குத் தோன்றவில்லை. மோடி செய்தது தவறு என்று அப்போது அவர்களுக்குத் தோன்றவில்லை.
ஐபிஎல் தொடங்கியது முதல் இதுவரை எந்த ஒரு கண்காணிப்பையும் அரசோ அல்லது கிரிக்கெட் வாரியமோ மேற்கொண்டதில்லை. இவ்வளவு பெரிய அளவில் பணம் புழங்குகிறதே, இதைக் கண்காணிக்க வேண்டும், இத்தனை நூறு கோடிகளைக் கொட்டி அணியை வாங்குகிறார்களே, அவர்களுக்கு எப்படிப் பணம் வந்தது என்பது குறித்து அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சற்றும் கவலைப்படவில்லை. இப்போது வரிந்து கட்டிக் கொண்டு கோப்புகளை நோண்ட ஆரம்பித்துள்ளனர்.
அன்று அத்தனை பேரும், ஐபிஎல்லை ஆச்சரியமாகப் பார்த்தனர், போட்டிகளை கை கொட்டி ரசித்துப் பார்த்தனர். இந்திய கிரிக்கெட், உலகையே ஆள ஆரம்பித்து விட்டதாக பெருமை கொண்டனர்.
இதை விட கொடுமை, 2009ல் நடந்தது. இந்தியாவில் பொதுத் தேர்தல் வருவதால், ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்குமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை நிராகரித்து விட்டார் மோடி. அத்தோடு நில்லாமல் தேர்தல் நடந்தால் எங்களுக்கு என்ன, நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் போய் போட்டியை நடத்திக் கொள்கிறோம் என்றும் தெனாவெட்டாக அறிவித்தார். சொன்னபடியே போட்டியையும் அங்கு போய் நடத்தினார்.
ஒரு .அரசாங்கம் சொன்ன யோசனையை நிராகரித்த மோடியை அன்று யாருமே கண்டிக்கவில்லை. நாட்டின் பொதுத் தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை. எங்களுக்கு விளையாட்டும், பணமும்தான் முக்கியம் என்று அன்று மோடி சொன்னபோது அதை யாருமே கண்டிக்க முன்வரவில்லை.
இப்போதைய பிரச்சினை எப்படிப் போய் விட்டது என்றால், பாஜக Vs காங்கிரஸ் என்று மாறியுள்ளது. மோடியை, பாஜக நபராக பார்க்கிறது மத்திய அரசு . தரூரைக் கூட வேறு வழியில்லாமல்தான் நீக்கியது காங்கிரஸ். அதற்குப் பழி வாங்கும் வகையில் இப்போது பிரணாப் முகர்ஜி , ப.சிதம்பரத்தை வைத்த மோடியை தூக்கியடிக்கும் வேலையில் காங்கிரஸ் அரசு மறைமுகமாகவும், நேரடியாகவும் களத்தில் இறங்கியுள்ளது.
மோடி மட்டும் தவறு செய்யவில்லை. பலருக்கும் பல வகைகளில் தவறுகளில் தொடர்பு உள்ளது. இப்போது அவரவரைக் காப்பாற்றிக கொள்ள என்ன நடவடிக்கை தேவையோ அதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மொத்தத்தில், மோடி –தரூர் ஆகிய இருவரையும் வைத்து நடந்து வரும் ஆடு புலி ஆட்டத்தில் தரூர் போய் விட்டார், மோடி போகப் போகிறார்.
ஆட்டம் அத்துடன் நிற்குமா அல்லது தொடருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment