Sunday, April 18, 2010

கோடி கோடியாய் கொட்டும் பணம்! அழகியால் அமபலமான கிரிக்கெட் மோசடி!


shockan.blogspot.com

வியர்வையை காசாக்க முடியாமல் விவசாயிகள் தவித்துக்கொண்டிருக்கிற இந்த நாட்டில்தான், ரசிகர்களின் பார்வையை பணமழையாக்கிக் கொண்டிருக்கின்றன ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கள். சர்ச்சைகளின் நாயகனான மத்திய வெளி யுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூரின் புதிய காதலி பற்றிய சர்ச்சையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் அடித்தளத்திற்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டாவது மனைவி யுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சசிதரூர், தற்போது காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். துபாயில் வசித்து வந்த சுனந்தா சமீப காலமாக சசிதரூருடன் எல்லா இடங்களுக்கும் பயணிக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவர் சசிதரூர். அவரது மாநிலத்தைச் சேர்ந்த புதிய கிரிக்கெட் அணியான ஐ.பி.எல்.கொச்சி அணியில் சுனந்தாவுக்கு 18% பங்குகள் (70கோடி ரூபாய்) இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விவகாரம்தான் சசி தரூரையும் ஐ.பி.எல் அமைப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. புது திருமண விவ காரம் பூகம்பங்களை கிளப்பிவிட்டது.

பிட்ச் மாற்றினால் பேட்டிங் நன்றாக இருக்கும் என்று சசிதரூர் நினைத்தார். ஆனால், இப்படி பவுன்சர்களாக கிளம்பும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த பவுன்சர்கள் சசிதரூரை மட்டுமில்லாமல் ஐ.பி.எல். கமிஷனர் லலித்மோடியையும் பதம் பார்க்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் வட்டாரத்தினர்.

கிரிக்கெட்டில் தனிப்பட்ட சிலரின் ஆதிக்கத்தைத் தகர்த்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் 20 ஓவர் லீக் மேட்சுகளை நடத்துவதற்காக ஐ.சி.எல் என்ற அமைப்பை உருவாக்கினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். அதை செயல்பட விடாமல் முடக்கும் நோக்கத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 20 ஓவர் லீக் போட்டி களில் இறங்கிய தால் உருவானதுதான் ஐ.பி.எல் . அணிகள். ராஜஸ் தானைச் சேர்ந்த தொழிலதிபரான லலித்மோடிதான் இதன் தலைவர். (இப்போது ஐ.பி.எல். கமிஷனர் எனப்படுகிறார்).

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என 8 ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப் பட்டு, அவற்றிற்கான வீரர்கள் ஏலமுறையில் எடுக்கப்பட்டபோதே பணவெள்ளமும் சர்ச்சைகளும் ஐ.பி.எல் லில் கரைபுரளத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அணிக்கும் ஓனர்கள் உண்டு. அதில் பங்குதாரர்கள் உண்டு. அவர்கள்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பார்கள். மும்பை அணிக்கு முகேஷ் அம்பானி ஓனர். சென்னை அணிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன் ஓனர். கொல்கத்தா அணிக்கு ஷாரூக்கானும், பஞ்சாப் அணிக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் ஓனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200 கோடிக்கு ஏலம் எடுத்தார் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன். அதை 2000 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு பேரம் நடந்து கொண்டிருக்கிறது என்கிறது ஐ.பி.எல். வட்டாரம். ஒவ்வொரு அணியும் 10 வருட ஒப்பந்தத் துடன் அந்தந்த ஓனர்கள் வசம் உள்ளது. இதில் வருடத்திற்கு டி.வி. ரைட்ஸாக 17 கோடி ரூபாய் கிடைக்கிறது. வரு டந்தோறும் சென் னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டி களின் டிக்கெட் விற்பனை மூலமாக 31 கோடியே 50 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இது தவிர விளம்பர வருமானம், ஸ்பான்சர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என பணம் கொட்டுகிறது.

சென்னை அணியைப் போலவே மற்ற அணிகளும் தோற்றாலும் ஜெயித்தாலும் வருமான மழையில் நனைகின்றன. தனித்தனி அணிகளுக்கான வருமானம் போக, ஐ.பி.எல். அமைப்புக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானமாக கிடைக் கிறது. ஐ.பி.எல்லின் தற்போதைய மதிப்பு 18ஆயிரம் கோடி ரூபாய். இந்தப் பணப்புழக்கம்தான் சர்ச்சைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம்.

தென்மாநிலங்களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகியவற்றுக்கென ஐ.பி.எல். அணிகள் உள்ள நிலையில் கேரளா வுக்கென தனி அணி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறவே புதிதாக ஐ.பி.எல். கொச்சி அணி உருவாக்கப்பட்டது. இதுபோலவே புனே அணியும் உருவானது.கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1533 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. இதில்தான் சசிதரூரின் காதலிக்கு 18% ஷேர் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பங்கு குறித்தோ, கொச்சி அணியின் பங்குதாரர்கள் யாரென்பதையோ வெளிப்படுத்தக்கூடாது என்று சசிதரூர் தன்னிடம் போனில் வலியுறுத்தியதாக ட்விட்டர் வலைத்தளத்தில் லலித் மோடி தெரிவித்ததுடன், கொச்சி அணியில் சுனந்தா புஷ்கரின் பங்குகள் பற்றி வெளியிட, அதனைத் தொடர்ந்தே ஐ.பி.எல். விவகாரம் அரசியல் பரபரப்பானது. இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் சசிதரூர், ""நான் லலித் மோடியிடம் பேசியது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. கொச்சி அணியை ஏலத்தில் எடுத்திருப்பவர்கள் யார் என்று பங்கு தாரர்கள் பெயரை வெளியிட்டதன் மூலம் ஐ.பி.எல். விதிமுறைகளை லலித் மோடி வெளியிட்டு விட்டார். கொச்சி அணி பற்றி வெளியிட்டவர், ராஜஸ்தான் அணியின் பங்குதாரர்கள் பற்றிய விவரத்தை வெளியிடுவாரா?'' எனக் கேட்டிருந்தார்.

ஆஸ்திரலிய வீரர் ஷேன் வார்னேவை கேப்டனாகக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணியின் ஓனர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும் எமர்சன் இந்தியா என்ற நிறுவனமும்தான் அறியப்பட்டுள்ளனர். இந்நிலையில், யார், யார் உண்மையான பங்குதாரர்கள் என்ற சசிதரூரின் கேள்வி, ஐ.பி.எல்லுக்குள் புதைந்திருக் கும் ரகசியங்களை தோண்ட ஆரம்பித்திருக்கிறது.

இது குறித்து ஐ.பி.எல் வட்டாரங்களில் கேட்ட போது, ""கொச்சி அணியில் சுனந்தாவுக்கு கிடைத்த இலவச பங்கு என்பது சசிதரூரின் பங்கு என்றும் சுனந்தா பினாமிதான் என்றும் சொல்லப்படுகிறது. அதுபோல ராஜஸ்தான் ராயல்ஸில் ஷில்பா ஷெட்டி ஓனராக அறியப்பட்டாலும், லலித் மோடிதான் உண்மை யான ஓனர் என்பது சசிதரூரின் குற்றச்சாட்டு. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யில் மட்டுமல்ல, ஒவ்வொரு அணியிலும் உண்மையான ஓனர்கள் மறைவாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அந்தந்த மாநிலத் தின் அரசியல் தலைகள், அன்டர் கிரவுண்டு தாதாக்களாக இருப்பதால் உண்மை அத்தனை சுலபமாக வெளியே வருவதில்லை. தொழிலதிபர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் முன்னிறுத்தி, தங்களின் கறுப்பு பணத்தை அவர்கள் இதில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற வருமானத்துக்கு வரி நெருக்கடி இல்லாமல் எப்படி கணக்கு காட்டுவது என்பது தொழிலதிபர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் அத்துப்படி. அதுதான் ஐ.பி.எல்.லில் நடந்துகொண்டி ருக்கிறது'' என்கிறார்கள்.

சசிதரூரை மையமாக வைத்து வெளிப்பட்ட ஐ.பி.எல். வில்லங்கம் அவரது பதவிக்கு வேட்டு வைக்கும் கத்தியாக பா.ஜ.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளின் கைகளில் உள்ளது. சோனியா, மன்மோகன் சிங் என காங்கிரஸ் மேலிடத்தில் சசிதரூர் விவகாரம் சீரியஸாக விவாதிக்கப்படுவதால், அவரது பதவி பறிப்பு குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். அதே நேரத்தில், காங்கிரஸ் அரசுக்கு ஐ.பி.எல். மூலம் நெருக்கடி முற்றியிருப்பதால், ஐ.பி.எல்.லில் நடக்கும் பண மோசடிகள் குறித்து மத்திய அரசின் வருமானவரித்துறை, அமலாக்கப் பிரிவு உள்ளிட்டவையும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

மோசடிகளின் மொத்தக்கூடாரமாக உள்ளது ஐ.பி.எல். அமைப்பு. ரகசியங்கள் வெளியே வருமா, அல்லது இன்னும் ஆழத்தில் புதைக்கப்படுமா என்பதுதான் ஐ.பி.எல்லைப் போலவே ரொம்பவும் மதிப்புமிக்க கேள்வி.

No comments:

Post a Comment