shockan.blogspot.com
நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.
யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.
இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.
யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.
ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.
இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.
தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.
இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.
கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.
உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.
விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !
வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.
நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.
வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.
ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.
ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.
No comments:
Post a Comment