Tuesday, April 27, 2010

புயல் வேகத்தில் உதவிய ஸ்டாலின்...


shockan.blogspot.com
சென்னை: தவறான சிகிச்சையாலும் காலாவதியான மருந்தாலும் பார்வை பறி போன மாணவியின் முழு சிகிச்சை செலவையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். கண்ணில் லென்ஸ் பொருத்த அடுத்த வாரம் அவர் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்படுகிறார்.

சென்னை திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). வேன் டிரைவராக உள்ளார் தேவேந்திரன்.

கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர்.

அவர் சில மாத்திரைகளை எழுதித் தத்தார். அதை சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து ரத்தம், சிறுநீர் ஆகியவை அப்போது பரிசோதிக்கப்பட்டன.

இந் நிலையில், சுரேகாவின் உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்தன. வாய் பகுதி புண்ணாகியது. கண்கள் இரண்டிலும் ரத்தம் கட்டி, பார்வை மங்கத் தொடங்கியது.

இதையடுத்து அந்த டாக்டரிடமே மீண்டும் காட்டியபோது, வீரியம் அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து சுரேகாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனை க்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு மாத சிகிச்சைக்குப் பி்ன் கட்டிகளும், வாய் புண்ணும் மறைந்தன. ஆனால், கண் பார்வை சீராகவில்லை. அது மேலும் மங்கியது.

இதனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேகாவிற்கு பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சுரேகாவுக்கு பார்வை வரவில்லை. இதனால் அவரது படிப்பும் நின்றுபோய்விட்டது.

இந் நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலும் சுரேகா சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள், சுரேகாவிற்கு கண்ணில் லென்ஸ் பொருத்தினால் பார்வை கிடைக்கும் என்று கூறினர்.

ஆனால், இந்தியாவில் இந்த லென்ஸ் கிடைக்காது என்றும், வெளிநாட்டில்தான் வாங்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணம் செலவழித்துவிட்ட அந்த ஏழைக் குடும்பத்தால் இந்தச் செலவை ஏற்க முடியவில்லை.

இதனால் அரசின் உதவியை எதிர்பார்த்து நேற்று முன்தினம் மகள் சுரேகா, மனைவி கலாவதியுடன் தேவநேதிரன் சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அரசு அதிகாரிகளை சந்தித்து, மகளின் சிகிச்சைக்கு உதவி கோரி மனு கொடுக்க காத்திருந்தார்.

ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரை எந்த அதிகாரியும் சந்திக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து செய்தி அறிந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி சுரேகா குறித்த விவரங்களை திரட்டிவிட்டு சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டு சுரேகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவரை மீண்டும் சோதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து சுரேகாவை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு திமுக மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அவர்கள் சுரேகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரை மீண்டும் பரிசோதித்த டாக்டர்கள், சுரேகாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து லென்ஸ் பொறுத்தினால் பார்வை கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சுகேரா குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஸ்டாலின், சுரேகாவுக்கு கண் பார்வை கிடைக்க உலகின் எந்த மூலையில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நான் தயார். அதற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவரே ஹைதராபாத் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து வெளிநாட்டில் இருந்து லென்ஸை வரவழைக்க அந்த மருத்துவமனை சம்மதித்தது.

அடுத்த மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் ஹைதரபாத் மருத்துவமனைக்கு சுரேகா அழைத்துச் செல்லப்பட்டு லென்ஸ் சுரேகாவின் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படுவேகத்தில் ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கைகளால் சுரேகாவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

நிருபர்கள் அவர்களை சந்திக்கபோது ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர்கள் தொடர்ந்து பேசக் கூட முடியாமல் கண்ணீர் விட்டபடி இருந்தனர்.

1 comment: