Thursday, April 15, 2010

பெருகிப் போன போலி டாக்டர்கள்!

shockan.blogspot.com
""வயித்துப் போக்குக்கு வைத்தியம் பார்க்கத்தான் சத்யன் டாக்டர்ட்ட போனேன். அவர் குடுத்த மருந்தை சாப்பிட்டேன். ரெண்டு காலும் ஆனைக்கால் மாதிரி வீங்கிப் போச்சுங்கய்யா.''

""உடம்பு வலிக்கு மாத்திரை கேட்டு நம்பிராஜன் டாக்டரிடம் போனேன். இப்ப கால் முழுக்க கொப்புளம் கொப்புளமா பொத்து வடியுது... என்ன மருந்தைக் குடுத்தாரோ தெரியலை... இவரு நெஜமாவே டாக்டர்தானா?''

தொலைபேசியில் வந்த இந்தப் புகார்களை நெல்லை எஸ்.பி. அஸ்ராகார்க் அலட்சியப்படுத்தவில்லை. உடனே ஸ்பெஷல் டீமை களமிறக்கினார். வீரவநல்லூர், அம்பை, ஆழ்வார்க்குறிச்சி, வி.கே.புரம் ஏரியாக்களில் களமிறங்கிய ஸ்பெஷல் டீம் சத்யன், நம்பிராஜன், அண்ணாமலை, பாபநாசம் இந்திராணி, கண்ணன் என 11 போலி(?) டாக்டர்களை அள்ளிக் கொண்டு வந்தது.

""8-ஆம் வகுப்பு சத்யன் ஊசி போடு கிறார். +1 படித்த நம்பிராஜனோ சிங்கப்பூர் ரிட்டன் டாக்டர் என்ற விளம்பரத்தோடு ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார். சிறுநீர் கோளாறுகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் தைரியம் இவருக்கு எப்படி வந்ததோ? ஏழை நோயாளிகளின் உயிரோடு விளையாடி இருக்கிறார்கள் இந்தப் போலிகள்!'' என்கிறார் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகேசன். இவர்கள் போலிகள் என்றால் இருபது முப்பது ஆண்டுகளாக எப்படி கிராமங்களில், டாக்டர் தொழிலில் நிலைத்து நிற்க முடிகிறது?

""டவுன்ல இருக்கிற பெரிய டாக்டர்ட்ட போனா 500 ரூபாய், 600 ரூபாய்னு பீஸ் புடுங்கிருவாக... ஆனா எங்க ஊர் எம்.எய்ட்டி டாக் டருக ஐம்பது நூறு தான் மொத்தமே கேப்பாவ... இருந் தாக் குடுப்பம்... இல்லைனா பெறவு தாறம்னு சொல்லு வோம்... செரீனு போவாவ... எங்களுக்கு எம்.எய்ட்டி டாக்டருகதான் கடவுள்!'' என்றார்கள் மருதன்கிணறு ஊராட்சித் தலைவர் பால்சாமி, முனியம்மாள், பேச்சியம்மாள், காளியம்மாள் போன்றோர்.

இந்த மருத்துவர்கள், கிராமங்களுக்கு "எம்-80' என்ற டூவீலரில் செல்வதால் எம்.எய்ட்டி டாக்டர் என்று அழைக்கிறார்கள் கிராம மக்கள்.

""மெயின் ரோட்டுக்கு வரவே 11 கி.மீட்டர் நடக்கணும். பஸ் வசதி சொல்லிக்கிற மாதிரி இல்லை. எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் இங்கேயெல்லாம் வரவே மாட்டார்கள். இந்த மக்களுக்கெல்லாம் எம்.எய்ட்டி டாக்டர்கள்தான் தெய்வம்... அழகு நாச்சியாபுரம் வெள்ளைச்சாமி ஒண்ணுக்கு சரியா பிரியலைனு எம்.எய்ட்டி டாக்டர்ட்ட வைத்தியம் பாத்தாரு. ரொம்ப முத்தினதும் பாளை ஆஸ்பத்திரிக்கு போனார். கிட்னி பெய்லியராம். முடிஞ்சு போச்சு. பொம்புளை சீக்குனு சொல்லி கருப்பசாமிக்கு சிகிச்சை குடுத்தாராம் ஒரு எம்.எய்ட்டி. வியாதி முத்தின பிறகுதான் எய்ட்ஸ்னு தெரிஞ்சது. அவரும் செத்துப் போயித்தார். தலையெழுத்து அவ்வளவு தான்னு மனசை தேத்திக்கிட வேண்டியதுதான்!'' -பழங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பாண்டி உடையார் கிராம மக்களின் மனநிலையைச் சொன்னார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநரக வட்டாரமோ... ""டாக் டர்கள் பற்றாக்குறையும் டாக்டர்கள் பட்டிக் காடுகளில் பணியாற்ற மறுப்பதும்தான் இந்த மாதிரி போலிகள் பெருகக் காரணம்!'' என்கிறது.

இது புரையோடிய நீண்ட நாள் வியாதி. அதிரடி சிகிச்சை மூலம்தான் அரசு இதை ஒழிக்க வேண்டும்.

1 comment:

  1. In vellore district Lot's of Doctors are there in Village side.There qualification is 10th,+2 some of the people not even complete there 10th standard,If this people playing with human.I don't know why the concern department is not taking any action against them.If that continues then what is the value of MBBS doctors.

    ReplyDelete