Sunday, April 11, 2010
காவி வேடத்தில் மலைக்கள்ளர்கள்
shockan
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலப் பாதையில்... புற்றீசல்கள் போல தினமொரு ஆசிரமம் முளைக்க... சட்டவிரோத சங்கதிகளும் சைலண்ட்டாக அரங்கேறிவருகிறது.
இது குறித்து ஏகத்துக்கும் புகார்கள் அலுவலகத்துக்கு குவிய... விசாரணையை ஆரம்பித்தோம்.
"அண்ணாமலைக்கு ஒருதரம் வந்தால்... எல்லா வினையும் தீருமடா' என வாய்விட்டுப் பாடிக் கொண்டிருந்த அந்த லோக்கல் ஆன்மீகப் பிரமுகரை முதலில் மடக்கினோம்.
""ஆமாங்க. இங்க நடக்குற அட்டூழியங்களால்... ஆன்மீகமே தலைகுனியுது. என் பெயரையோ படத்தையோ போட்றாதீங்க. எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன்''’என்றபடி விவரிக்க ஆரம்பித்தார் அவர். “
""மலையில் இருக்கும் முலைப்பால் தீர்த்தத்துக்கிட்ட கவுதம்புரி ஆசிரமம்னு ஒண்ணு இருக்கு. இங்க இருந்த கவுதம்புரி சாமியார்... ஒரு ஹோமோ செக்ஸ் ஆசாமி. இளவட்டப் பசங் களைக் காசு கொடுத்தும் மிரட்டியும் தன்னோட இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். இவரோட இம்சைகளைத் தாங்க முடியாத 4 பேர் சேர்ந்து... மூணு வருசத்துக்கு முன்ன.. அவர் தலையில பாறையைப் போட்டுக் கொன்னுட்டானுங்க. இந்த கொலைக்காரப் பசங்களுக்கு காட் ஃபாதரா இருந்தவன்... ஆடுவெட்டி சேகர் என்ற ரவுடிதான். அவன் இப்ப சாமியார் வேஷத்தில் மலையில் சின்னதா ஒரு கோயில் கட்டிக்கிட்டு உட்கார்ந்துட்டான். இந்த மலையில் புதுசா குடில் கட்டணும் ஆசிரமம் அமைக்கணும்னு வர்ற போலி சாமியார்களுக்கு இடம்பிடிச்சிக்கொடுத்து.. அதை சுத்தப்படுத்திக்கொடுப்பது இவன்தான். அதுக்காக அவங்கக்கிட்ட ஏகத்துக்கும் கூலி வாங்கிக்குவான். அதேபோல் முலைப்பால் தீர்த்தம் அருகே இருக்கும் சுனைநீரை பைப்போட்டு எடுத்து.... அண்ணாமலையார் தீர்த்தம்னு அவன் வியாபாரம் பண்ணியும் காசு பாக்கறான். இவனோட மாமியாரும் தனியா ஒரு கோயிலைக்கட்டி தனி ஆவர்த்தன வசூல் பண்ணுது.
இதேபோல் வாலைச்சித்தர் ஆசிரம சீனிவாசன்... படம் எடுக்க பார்ட்னர் தேவைன்னு பலபேர்ட்ட பணம் வசூலிச்சார். சம்பந்தப்பட்ட படத்தோட நடிகை தன்னோட ஒரு ராத்திரியாவது தங்கணும்னு சாமி யார் அடம்பிடிச்சதால் படம் பாதி யிலேயே நிக்கிது. இவர் ரெடிமேடா தாயத்து, தகடுகளை செஞ்சி வச்சிக்கிட்டு அண்ணாமலையார் அருளியதுன்னு சீட்டிங் பண்ணி பணம் வசூலிக்கிறார். அதேபோல் உளுந்தூர்பேட்டை சாமியார் என்பவர்... பணத்தை வட்டிக்கு விட்டு அரட்டல் உருட்டலா படை பரிபாலனம் பண்றார். சடைச்சாமி ஆசிரமத்தை நடத்தும் திருப் பாதமோ, தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் போடறேன்னு பெரிய அளவில் வசூலை நடத் துறார். ஆனா மாசம் ஒரு நாள் மட்டும் கொஞ்சம் பேருக்கு சாப் பாடு போட்டுட்டு பணத்தை அமுக் கிடறார். இப்படி 70-க்கும் மேற் பட்ட போலிச் சாமியார்கள் மலையை ஆக்கிரமிச்சிருக்காங்க. இவங்க பொழுதுபோக்கே கஞ்சா, பெண்கள், போதை விசயங்கள்தான். குறி கேட்க வரும் அப்பாவிப் பெண்களை... கஞ்சாவை அரைச்சி உருட்டி, பிரசாதம்னு கொடுத்து... மயங்க வச்சி... எளிதா கெடுத்துடு வாங்க. பலபேர் மானத்துக்கு பயந்து வெளில சொல்றது இல்லை. இப்படிப்பட்டவங்களைக் களையெடுத்தாதான் அண்ணாமலையின் புனிதத் தைக் காப்பாத்த முடியும்''’என்றார் விரிவாகவே.
இது உண்மைதானா? இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபுவிடமே கேட்டோம். “""போலி சாமியார்களால்தான் ஆன்மீகத்தின் புனிதமே கெடுது. வேலூர் நீதிமன்றம் "1940-லேயே மலையின் முன்பகுதியை கோயிலுக்கு அரசு குத்தகைக்கு விட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் யாரும் ஆக்கிரமிப்புகளை செய்யக்கூடாது'ன்னு அழுத்தமா சொல்லியிருக்கு. ஆனா பலபேர் ஆக்கிரமிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியவர் மாவட்ட ஆட்சியர்தான். வேதவித்து சாமியார் மலையை உடைத்து பில்டிங் கட்ட ஆரம்பிச்சப்ப.. அதைத் தடுக்கப்போனோம். ஆனா அவருக்கு சப்போர்ட்டா அரசியல்வாதிங்க திரண்டு வந்து நிக்கறாங்க. இவங்களை கையில் வச்சிக்கிட்டுதான் சாமியார்கள் ஆட்டம் போடறாங்க. சில சாமி யார்கள் "நான் கொலைபண்ணிட்டு வந்தவன்'னு அப்பாவிகளை மிரட்டறாங்க. இப்படிப்பட்டவங் களைக் கண்காணிச்சி நடவடிக்கை எடுத் தாகணும்''’என்கிறார் காட்டமாய்.
இந்து முன்னணி மா.செ. வழக்கறிஞர் சங்கரோ ""ஆக் கிரமிப்பு தொடர் பான ஒரு வழக்கில் உச்சநீதி மன்றம், மலையை ஆக்கிரமிப்பு செஞ்சவங்களை அகற்றணும்னு சொன்னதோட கிரிவலப்பாதை வளர்ச்சியில் அக்கறை காட்டணும்னும் உத்தரவு போட்டது. இதை கண்காணிக்க முன்னாள் நீதிபதி வெங்கிடசாமியையும் நியமித்தது. அவர் இறந்தபிறகு வேற கண்காணிப்பாளரை நியமிக் காததால் நிலைமை மோசமா இருக்கு. இங்க இருக்கும் 90 சத ஆசிரமங்கள்.. சட்டத்துக்குப் புறம்பான ஆசிரமங்கள்தான். சமூக விரோத செயல்கள் பாதுகாப்பா இவைகளில் நடக்குது. கோயில் மேம்பாட்டுக் கமிட்டித் தலைவரை நியமிச்சி... வளர்ச்சிப்பணிகளை செய்யணும்னு கோரிக்கை வச்சும் யாரும் கண்டுக்கிறதா இல்லை''’’ என்கிறார் எரிச்சலாய்.
புகாருக்கு ஆளான சாமியார்களை நாம் தொடர்புகொண்ட போது... எவரிடமிருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லை.
இது தொடர்பாக நாம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் கேட்டபோது ""இந்த மலை 2669 அடி உயரமும் 1727 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டது. இதில் 234 ஹெக்டேர் ரெவின்யூ லேண்ட். அதில்தான் ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க. புதிய ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க மலையில் வேலி வைக்கத் திட்டமிட்டிருக்கோம். மற்றபடி ஆக்கிரமிப்பு ஆசிரமங்களை எடுப்பதில் நிறைய சட்டச்சிக்கல் இருக்கு. இப்ப நீங்க சொல்றதைப் பார்த்தா அதிர்ச்சியா இருக்கு. உடனே ஆசிரம சாமியார்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடு கிறேன்''’’ என்றார் நம்மிடம்.
மலைக்கள்ளர்களான போலி சாமியார்களின் பிடியில் இருந்து பக்தர்களை யார் வந்து மீட்கப்போகிறார்களோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment