shockan.blogspot.com
நளினியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்... நளினியின் செல்போனை பறிக்க பெண் அதிகாரிகள் நடத்திய 3 மணி நேர போராட்டம்... கழிவறை குழாய்க்குள் வீசப்பட்ட செல்போன் என்று வேலூர் பெண்கள் சிறையை மையமாக வைத்து பரபரப்பு செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் நளினி மீது சிறையின் நன்னடத்தை விதியை மீறியது உட்பட 4 பிரிவுகளில் பாகாயம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த புதிய வழக்கு நளினியின் விடுதலையை மேலும் தாமதமாக்கும் என்ற கவலையில் இருக்கிறார்கள் அவரின் நலன் விரும்பிகள். சிறைத்துறை நடத்திய நாடகம் இது என்று கொதிக்கிறது நளினி தரப்பு. தமிழக சட்டமன்றம் வரை எதிரொலித்திருக்கும் இந்த விவகாரம் பற்றி இரண்டு தரப்பிடமும் விசாரித்தோம்.
நளினி மீது குற்றம் சாட்டும் சிறைத்துறை என்ன சொல்கிறது?
""சிறைக் கைதிகள் தங்கி யிருக்கும் இடங்களில் திடீர் சோதனைகள் நடத்துவது வழக் கம்தான். புழல் சிறையில் இருந்து வேலூர் பெண்கள் சிறையின் கண்காணிப்பாளராக கடந்த சில வாரங் களுக்கு முன்பு பொ றுப்பேற்றார் ராஜ லட்சுமி. அவர் பொ றுப்பேற்ற பிறகு ஒரு பெரிய ரெய்டு நடத்தவேண்டும் என திட்டமிட் டார். அதன் அடிப் படையில் 20-ம் தேதி காலை யில் ரெய்டு நடந்தது. முதல் முறை ரெய்டு நடத்தியபோது நளினி யிடம் எதுவும் சிக்கவில்லை. இரண்டாவது முறை சோதனை யில் சிக்கிக் கொண்டார்'' என்கிறார்கள் வேலூர் சிறைத் துறை அதிகாரிகள்.
சோதனையை முன்னின்று நடத்திய கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடமே நளினியின் செல்போன் விவகாரம் குறித்து கேட்டோம். ""கடந்த சில நாட்களாகவே சிறைக்கைதி ஒருவர் ரகசியமாக செல்போன் பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து கண்காணித்து வந்தோம். நளினியின் மீதுதான் அதிக சந்தேகம் இருப்பதாக வார்டன் கள் கூறினார்கள். இருந்தாலும் சிறை முழுவதும் சோதனை நடத்தி விடலாம் என்று 20-ம் தேதி ஒரு டீமுடன் களமிறங்கி னோம். முதல் முறை நளினி அறைக்கு சென்றபோது எங்க ளால் எதையும் கண்டறிய முடியவில்லை. சாமர்த்தியமாக செல்போனை மறைத் திருக்கிறார் நளினி. அவர் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஆய்வு நடத்தவேண்டும் என முடிவு செய்து இரண்டாவது முறை யாக சரியாக 27 நிமிடங்கள் கழித்து அவர் அறைக்கு சென்றோம். அவர் அறையில் இருந்த சணல் பை ஒன்றில் செல்போன் இருந்தது. நோக்கியா 1310 மாடல் செல்போன் அது. சிறைத்துறை காவலர்கள் அந்த செல்போனை கைப்பற்ற முயற்சிக்க... உடனே அந்த போனை தரையில் வேகமாக அடித்தார் நளினி. சிதறி விழுந்த செல்போன் பாகங்களை டாய்லட்டுக்குள் தள்ளி தண்ணீர் ஊற்றி விட்டார். அப்படியும் விடாமல் சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் லட்சுமி உள்ளிட்டவர்கள் வெளிப்பக்கம் சென்று சிங்க்கை உடைத்து செல்போன் பாகங்களை சேகரித்தார்கள். நளினி பயன்படுத்திய ஏர்டெல் சிம்கார்டும் கைப்பற்றப்பட்டது. இதுபற்றி பாகாயம் போலீசில் புகாரும் கொடுத்திருக் கிறோம்’’ என்று தங்கள் தரப்பின் நட வடிக்கைகள் பற்றி விளக்கினார். நளினியிடம் கைப்பற்றிய செல்போனில் ஹேப்பி பர்த்டே என்று ஒரு எஸ்.எம். எஸ். இருந்ததாகவும், சம்பந்தம் இல் லாத அந்த மெசேஜ் கோட் வேர்டாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில். கைப்பற்றப்பட்ட சிம் கார்டு மூலம் நளினியின் தொடர்பு கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாகவும் சொல்கிறது சிறைத்துறை.
சிறைத்துறையின் இந்த குற்றச் சாட்டை முழுமையாக மறுக்கிறது நளினி தரப்பு. நளினி மீதான செல்போன் குற்றச்சாட்டுக்கு பிறகு அவரை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி,
""இது முழுக்க, முழுக்க சிறைத்துறை ஜோடித்த பொய்ப் புகார். நன்னடத்தை விதிகளின்படி நளினி விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக நன்னடத்தை விதி மீறல் பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள். இதை சட்டரீதியாக சந்திக்க தயாராகவே இருக்கிறோம்'' என்றவர், நளினி மீது திடீர் என இப்படி ஒரு புகார் வருவதற்கு பின்னணி இருப்பதாக குறிப்பிட்டார். அவர் சொல்லும் பின்னணி இதுதான்...
""19 வருடங்களை தமிழக சிறை களில் கழித்திருக்கும் நளினி, 13 வருடங்களுக்கு மேலாக வேலூர் பெண் கள் சிறையில் இருக்கிறார். இதுவரை அவர் மீது எந்தப் புகாரும் எழவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அவரை சந்திக்க வரும் உறவினர்களை அலைக்கழிப்பது, வழக்கறிஞரை சந்திக்க விடாமல் தடுப்பது உள்ளிட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். இதுபற்றி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரு புகார்க் கடிதத்தை சிறைத்துறை தலைவருக்கு அனுப்பினார் நளினி. எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பதால் 12-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் சிறைத்துறை விஜி லன்ஸ் தலைமைக்காவலர் உதய குமாரி மீது வெளிப்படையாக குற்றச் சாட்டுகள் வைத்திருந்தார். அவர் மூலம் சிறைக்குள் ஹான்ஸ், பொடி, போதைப் பொருள் எல்லாம் உள்ளே வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சிறைக்கைதிகளை பிளவுபடுத்தி தனக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 14-ம் தேதியும் சிறைத்துறை தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இந்த பின்னணியில்தான் நளினி மீது செல்போன் வைத்திருந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் சாரதா வழக்கில் உறுதியான சாட்சியாக நளினி இருப்பதுதான்'' என்று அது பற்றியும் விளக்கினார்.
""வேலூர் பெண்கள் சிறையில் சிறைக்காவலர்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார் சாரதா என்ற பெண் கைதி. இந்த விவகாரம் குறித்து விசாரிக் கும் படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஐகோர்ட். சாரதா விவகாரம் குறித்த விசாரணையை கடந்த 17,18,19-ம் தேதிகளில் வேலூர் சிறையில் மேற்கொண்டார் சிறைத்துறை டி.ஐ.ஜி.யான கோவிந்தராஜ். விசாரணையின் போது சாரதாவுக்கு எதிரான கொடுமைகள் குறித்து சாட்சியம் அளித்த ஒரே கைதி நளினிதான். இதைத் தொடர்ந்துதான் 20-ம் தேதி ரெய்டு என்கிற நாடகத்தை நடத்தியிருக்கிறது சிறைத்துறை'' என்று அழுத்தமாக குற்றச்சாட்டுகள் வைத்தார் வக்கீல் புகழேந்தி.
நளினியின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு வைக்கப்படு கிறதா என சிறைத்துறை தலைவர் ஷ்யாம்சுந்தரிடம் கேட்ட தற்கு, ""நளினியிடம் கைப்பற்றப்பட்ட சிம் கார்டில் இருந்து எல்லா உண்மைகளும் வெளிவரும். அப்போது யார் நடத்துவது நாடகம் என்பது தெரியவரும்'' என்கிறார். நளினியின் விடுதலையை சிக்கலாக்கும் சர்ச்சைகள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment