Wednesday, April 21, 2010

அடுத்த மூவ்! மாலத்தீவில் அழகிரி!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... தி.மு.க தொடர் பான விஷயங்கள் பற்றி பேட்டியளிக்கும் அதிகாரம், தனக்கும் பேராசிரியருக்கும்தான் இருக்குதுன்னு கலைஞர் கொடுத்த அறிக்கை, தொண்டர்களிடம் ஒரு நிம்மதியை ஏற்படுத்தியிருக்குது.''

""மாறி மாறி வெளியான பேட்டிகளால் அவங்கதானே பதட்டத்திலும் குழப்பத்திலும் இருந்தாங்க.''

""கலைஞர் இப்படி அறிக்கை கொடுத்திருக்காரேன்னு அழகிரிக்கு நெருக்கமான வங்ககிட்டே அவரோட ஆதரவாளர்கள் கேட்டிருக்காங்க. இதை அழகிரிக்கு நெருக்கமானவங்க அவர்ட்ட கேட்டப்ப, எல்லோரையும் வரச்சொல்லுங்கன்னு சொல்லிட்டாராம். எல்லோரும் அழகிரிகிட்டே, "தலைவர் இப்படி சொல்லியிருக்காரே, என்னண்ணே பண்றது'ன்னு கேட்க, அழகிரியோ... "ஆமாம் நான் பேட்டி கொடுத்தேன். தலைவர் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க'ன்னு சொன்னதும் எல்லோரும் அமைதியாகி, அப்படியே மவுனமா கலைஞ்சிட்டாங்களாம்.''

""அழகிரியும் மாலத்தீவுக்குப் பறந்துட்டாரே!''

""ஏப்ரல் 17-ந் தேதி யன்னைக்கு திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிலிருந்து நண்பர்கள், முக்கியமான ஆதரவாளர்களோடு மாலத்தீவுக்குப் பறந்தார் அழகிரி. இதில் அவரோட குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. இந்தத் தகவல் மதுரை உ.பி.க்களுக்குத் தெரிந்ததும், குடும்பத்தினர் இல்லாம அண்ணன் போயிருக்காருன்னா, அரசியல் நடவடிக்கைகள் பற்றி ரகசியமா ஆலோசிக்கத்தான் போயிருக்கிறார்னும், மந்திரி-எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வது பற்றி முடிவெடுக்கப்போறாருன்னும் பேச்சு கிளம்பிடிச்சி.''

""ஜாக் கம்யூனிகேஷன் கேபிள் தொடக்க விழா அன்னைக்கு கலைஞர் கோபப்பட்டது பற்றி அழகிரி தன்னோட ஆதரவாளர் கள்கிட்டே ஏதாவது சொன்னாராமா?''

""அதுபற்றியும் தனக்கு நெருக்க மானவங்ககிட்டே அழகிரி பேசியிருக்காரு. கலைஞரை அவர் சந்தித்தப்ப, என்ன இது ஜாக் கம்யூனிகேஷன்னு கலைஞர் கேட்க, கேபிள் எம்.எஸ்.ஓ. என் நண்பர் ஜெயராமனோடு சேர்ந்து தொடங்குறேன்னு அழகிரி சொல்லி யிருக்காரு. அதற்கு கலைஞர், அந்த ஆள் சரியானவரா இல்லையே.. நிறைய வழக்குகள் இருக்குன்னு சொல்ல, நான் ஜெயிலில் இருந்தப்ப அவர் உதவி செய்திருக்காரு. அதற்காகத்தான் இப்ப உதவுறேன்னு அழகிரி பதில் சொல்லியிருக்கிறார். அப்படின்னா நான் உதவலையான்னு கலைஞர் கேட்க, நீங்க என்ன உதவி செஞ்சீங்கன்னு அழகிரி கொஞ்சம் கோபமா கேட்டுட்டு வந்திருக்கிறார். இதை அப்படியே தன்னோட ஆதரவாளர்கள்கிட்டே சொன்ன அழகிரி, திரும்பவும் தலைவரைப் போய்ப் பார்த்துதான் சரிபண்ணனும்னு சொல்லியிருக்காரு.''

""யாரும் பேட்டிதரக்கூடாதுன்னு கலைஞர் கொடுத்த அறிக்கை பற்றி ஸ்டாலின் தரப்பில் என்ன சொல்றாங்க?''

""இப்ப உள்ள சூழ்நிலையில் கலைஞர் இப்படி அறிக்கை கொடுத்துட்டாரேன்னு ஸ்டாலின் ஆதரவாளர்கள் தரப்பில் பேச்சு இருக்குது. அதே நேரத்தில், இன்னொரு விஷயத்தையும் கட்சி வட்டாரத்திலிருந்து சுட்டிக்காட்டுறாங்க தலைவரே.. .. ஜாக் கம்யூனிகேஷன் தொடக்கவிழாவுக்காக தென்மாவட்ட தி.மு.கவினரிடமிருந்து முரசொலி பத்திரிகைக்கு நிறைய விளம்பரம் வந்திருந்தது. அதில் தேனி மா.செ. மூக்கையாவும் போடி எம்.எல்.ஏ லட்சுமணனும் கொடுத்திருந்த விளம்பரத்தில்தான் கலைஞர்- ஸ்டாலின்-அழகிரி இவங்க மூணுபேரு படமும் இருந்தது. மற்றதில் ஸ்டாலின் படம் இல்லை. மூக்கையா-லட்சுமணன் விளம்பரத்தை மட்டும் போடும்படி முரசொலி நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட, மற்ற விளம்பரங்களைப் போடலை. விளம்பரத்துக்காக கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுத் துட்டாங்க.''

""ம்..''

""தி.மு.க தொண்டர்கள் பலரும் ரொம்ப உற்சாகமா இருக்காங்க. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கலைஞருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிய விழாவில் பேசிய திருமா வளவன், 6-வது முறையாகவும் கலைஞர்தான் முதல்வராக வருவார் என்று சொல்லி சில கோரிக்கைகளை வைத்தார். கலைஞரும், மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார். செம்மொழி மாநாட்டுக்குப்பிறகு ஓய்வு என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி யிருந்தார். இப்ப, மீண்டும் தன் தலைமையில் ஆட்சி அமைந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்னு பேசி, அது முரசொலியில் வெளியானதைப் பார்த்த தி.மு.க தொண் டர்கள் ரொம்ப உற்சாகமாயிட்டாங்க.''

""அ.தி.மு.க தொண்டர்களிடமும் திடீர் உற்சாகம் தெரியுதே?''

""எல்லாம் பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜெ.விடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால்தாங்க தலைவரே... ... தேனிமாவட்டம் கடமலைக்குண்டு ஒ.செ. தர்மராஜும் அவரது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி, ஒ.செ.வின் தாயார் இறந்துட்டார். ஒ.செ. உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரையில் சிகிச்சை எடுத்தாங்க. இந்த தகவல் ஜெ.வுக்குத் தெரிவிக்கப்பட, 16-ந் தேதியன்னைக்கு ஜெ. ஸ்பெஷல் ஃப்ளைட்டில் மதுரைக்கு வந்து ஆஸ்பத்திரியில் இருந்த கட்சி நிர்வாகிகளை நேரில் பார்த்து ஆறுதல் சொன்னதோடு, கட்சி சார்பில் நிதியுதவியும் செய்தார். கட்சி நிர்வாகிகளைப் பார்ப்பதற்காக ஜெ வந்தது, அ.தி.மு.க தொண்டர்களிடம் நெகிழ்ச்சி யை உண்டாக் கியிருக்குது. இப்படி 4 வருசமா ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தியிருந்தா கட்சியின் வலிமையை யாரும் அசைத்திருக்க முடியாதுன்னு தொண்டர்கள் சொல்றாங்க.''

""கூட்டணிக் கட்சித் தலைவர் களோடு ஆலோசனை.. நெய்வேலியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு, மின்வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்னு கடந்த வாரத்தில் ஜெ ரொம்ப பிசியா இருந்தாரே?''

""இத்தனை நாளா கண்டுகொள்ளாமல் இருந்த ஜெ, தங்களை அழைத்துப் பேசியதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். இந்த சந்திப்புக்கு முன்னாடி சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், ஜெ.விடம் போனில் பேசியிருக் கிறார். சி.பி.எம். என்.வி, ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ நல்லகண்ணு, சி.மகேந்திரன், ம.தி.மு.க வைகோ, ஃபார்வார்டு பிளாக் கதிரவன் ஆகியோருடன் கலந்தாலோசித்த ஜெ, சசிதரூர் விவகாரத்தை வைத்து அரசியல் போக்கை காங்கிரஸ் திசை திருப்பிட அனுமதிச்சிடக் கூடாது. விலைவாசி உயர்வு விஷயத்தை நாம கீழ்மட்ட அமைப்புகள் வரை கொண்டு செல்லணும். நான் துணையா இருப்பேன்னு சொல்லியிருக் கிறார். 27-ந் தேதி பாரத் பந்த் நடத்துவது தொடர்பா அ.தி.மு.க சார்பில் நடக்கும் விளக்கப் பொதுக்கூட்டங்களில் கூட் டணிக்கட்சி நிர்வாகிகளையும் சேர்த்துக்கணும்னு ஜெ சொல்லி யிருப்பதால் தோழமைக் கட்சிகள் சந்தோஷமா இருக் குது. நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கிட்டவங்களுக்குத்தான் அத்தனை சந்தோஷமில்லை.''

""ஏன்?''

""ஜெ.வின் தேதி கிடைக்காமல் 15 வருசமா சாக்குத்துணியால் கட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையைத்தான் 18-ந் தேதியன்னைக்கு அவர் திறந்துவைத்தார். ஆனா, அதற்கு முன்னாடியே அந்த சிலையை லோக்கல் அ.தி.மு.க.வினர் திறந்துட்டாங்க. அதனால, ஜெ இரண்டாம் முறையா திறந்துவைத்தார். எம்.ஜி.ஆருக்கே இந்த நிலைமையான்னு அ.தி.மு.க.வினரிடம் முணுமுணுப்பு இருந்தது. அதன்பிறகு நடந்த மின்வெட்டு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்னு பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்களைக் கொண்டு வந்தும் எதிர்பார்த்த அளவுக்கு எழுச்சியில்லைங்கிறதுதான் லோக்கல் கட்சிக்காரர்களின் கமெண்ட். அதுவும் பெண்கள் சைடில் 500 பேர் அளவுக்குத்தான் இருந்திருக்காங்க. மின்வெட்டுக்காக மதிய வெயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களெல்லாம் வியர்த்து விறுவிறுத்து நிற்க, மேடையில் இருந்த ஜெ உள்ளிட்ட தலைவர்கள் 2 டன் ஏ.சி. மிஷினின் குளிரில் மின்வெட்டு பற்றி பேசியதையும் தொண்டர்கள் ரசிக்கலை. இருந்தாலும், இதேமாதிரி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தங்கள் தலைவி வெளியில் வந்து போராடணும்ங்கிறதுதான் அவங்க எதிர்பார்ப்பு.''

""அடுத்த தகவல்?''

""தே.மு.தி.க தலைமைக் கழக நிர்வாகிகளா இருக்கிற பார்த்தசாரதி, சந்திரகுமார், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி இவங்களையெல்லாம் கூப்பிட்ட விஜயகாந்த், ஊருக்குப் போய் வேலையைப் பாருங்கன்னு சொல்லியிருக்கிறார். கட்சித் தலைவர் திடுதிப்புன்னு இப்படிச் சொன்னதில் நிர்வாகிகள் அதிர்ச்சியாயிட்டாங்க. 5 வருசமா பொண்டாட்டி, புள்ளைகளையெல்லாம் பிரிந்து வந்து கட்சிக்காக நாயா உழைச்சிக்கிட்டிருக்கோம். இப்ப திடீர்னு நம்மை போகச்சொல்றாரேங்கிற ஆதங்கத்தோடு, "ஊருக்குப் போய் கட்சி வேலையை பார்க்கச் சொல்றீங்களா? பொழைப்பைப் பார்க்கச் சொல்றீங்களா'ன்னு விஜயகாந்த்கிட்டே கேட்டிருக்காங்க. அதற்கு அவரு, இரண்டையும்தான் சொல்றேன்னு சொன்னதும், நல்ல மனசோடுதான் இதைச் சொல்றாரா, புரியாம சொல்றாரான்னு தெரியாம தே.மு.தி.க நிர்வாகிகள் குழம்பிக்கிட்டிருக்காங்க.''

""ஓ...''

""தலைவரே... அமெரிக்காவில் உள்ள நித்யானந்தர் ஆசிரமம் சம்பந்தமா அங்கே டிவோட்டியா இருந்த டக்ளஸ் மெக்கல்லர், கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் புகார் மனு கொடுத்திருந்தார். இந்த மனு மீது வேகமா விசாரணை நடக்குது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தொடர்புகொண்டும் விசாரித்திருக்காங்க. இதையடுத்து, நித்யானந்தர் உள்பட 6 பேருக்கு கொடுக்கப்பட்டிருந்த விசாவை கேன்சல் செய்திருக்குது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம்.''

""இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஜெயித்தவர்கள் பொறுப் பேற்றிருக்காங்களே... செயல் பாடுகள் எப்படி?''

""இனிமேல்தான் செயல் படணும். பொறுப்பேற்ற நாளில் நிர்வாகிகளெல்லாம் தங்கள் ஆதரவாளர்களோடு பெரும் படையா வருவாங்கன்னு எதிர் பார்க்கப்பட்டது. ஆனா 100 பேர் அளவுக்குத்தான் மொத்தமே இருந்திருக்காங்க. இதில் வாசன் தரப்பு ரொம்ப அப்செட்டாம். அதே நேரத்தில் தேர்தல் முடிவு களுக்காக காங்கிரசின் ஒவ்வொரு கோஷ்டியும் வைக்கிற பிரியாணி விருந்துதான் கமகம பரபரப்பை உண்டாக்கிக்கிட்டிருக்கு. வாசன் கோஷ்டிக்கு தேர்தலில் கடும் நெருக்கடி கொடுத்து, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும் ப.சிதம்பரம் கோஷ்டி யில் உற்சாகம் கரைபுரளுது. இளைஞரணி துணைத்தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜன் உள்பட ப.சி. அணி சார்பில் ஜெயித்தவர்களுக்கு கார்த்தி சிதம்பரம் தலைமையில் சென் னையில் பாராட்டு விழா நடத்தினார் கராத்தே தியாகராஜன். விழா நடந்த கோடம்பாக்கம் ஏரியா முழுக்க கொடி, தோரணம்னு அமர்க்களப் படுத்தியிருந்தாங்க. விழாவுக்கு வந்திருந்த 2000 பேருக்கு 2 வகையான பிரியாணியும் 4 வகை சைடு டிஷ்ஷூம் கொடுத்து அசத்திட்டாரு கராத்தே. கார்த்தி சிதம்பரம் பேசுறப்ப, வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னை யில் மட்டும் 3 தொகுதிகளில் ஜெயிக்கணும்னு சொல்லியிருக்காரு. ப.சி. தரப்பின் விழாவைவிட பிரம்மாண்டமான விருந்துவிழா நடத்த வாசன் கோஷ்டி ரெடி யாகுது. சென்னையில் நடத்துவதா, ஈரோட்டில் நடத்துவதான்னு டிஸ்கஷன் நடக்குதாம்.''

""ஈரோடுன்னா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டிக்கும் பிரியாணி கொடுப்பாங்களா?''

""தலைவரே... தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ப.சிதம்பரத்திடம் ராகுல்காந்தி பேசியிருக்கிறார். அப்ப ப.சி, தலைவர்.. துணைத்தலைவர் எல்லோரும் கோஷ்டி பார்க்காமல் ஒன்று சேர்ந்து அரசியல் செய்தால் கட்சிக்கு நல்லதுன்னு சொன்னாராம். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல்காந்தி விரைவில் அழைத்துப் பேசுவார்னு எதிர்பார்க்கப்படுது.''

""எதிர்பார்ப்பிற்குரிய இன்னொரு தகவலை நான் சொல்றேன்... ... அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் மறுபடியும் கிடைக்குமா கிடைக்காதாங்கிற எதிர்பார்ப்புதான் அரசியல் களத்தில் பெட்டிங்கா மாறியிருக்குது. தி.மு.க சீனியர்கள் வட்டாரத்தில், தலைவர் கொடுக்க மாட்டார்னு பேச்சு நிலவுது. பா.ம.க தரப்பிலோ, நிச்சயம் சின்னய்யாவுக்கு சீட் கிடைக்கும். பெரியய்யாவும் சரஸ்வதிஅம்மாவும் சீக்கிரம் கலைஞரை சந்திப்பாங்க. அப்ப எல்லாம் சரியா யிடும்னு சொல்லப் படுது.''

மிஸ்டுகால்!



இலங்கையில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவிற்கு இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அழைக்கப்பட்டி ருக்கிறார். ராஜபக்சே அரசின் இனவெறியை ஆதாரங்களுடன் விளக்கி, "அமிதாப் கலந்துகொள்ளக்கூடாது' என ஈழத்தமிழர் கள் அவருக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள்.



தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பலவற்றிலும் பட்டமளிப்பு உறுதிமொழி தமிழில்தான் ஏற்கப்பட்டு வந்தது. இந்த வருடத்திலிருந்து திடீரென ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. "உயர்கல்வித்துறை வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செய்கிறோம்' என்கிறார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். "செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உயர்கல்வித்துறை ஏன் இப்படி தமிழைப் புறக்கணிக்கிறது' எனக் கேட்கிறார்கள் தமிழ்ப்பேராசிரியர்கள்

No comments:

Post a Comment