shockan.blogspot.com
மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறம்தான் முறுக்கிய மீசையுடன் முறைத்துக்கொண்டு நிற்கும் கருப்பு அய்யனார் கோயில். ஏப்ரல் 7-ந் தேதி மாலை ஐந்து மணி இருக்கும். அடர்ந்த மரக் காடுகளுக்கும் நடுவில் வாயில் நுரை தள்ளியபடி இரண்டு வாலிபர்கள் மயங்கிக் கிடக்க... எப்படியோ தகவல் பரவி ஊரே ஓடிவந்து பார்த்திருக்கிறது.
""அய்யய்யோ... நம்ம மஞ்சுநாத்துடா'' என்று சிலர் பதற... ""அய்யய்யோ... நல்லதம்பி மகன் தமிழ்மணியாச்சே...'' பதட்டத்துடன் தொட்டுப் பார்த்தபோது ஜில்லிட்டுப் போனதுடன் இருவரது ஹார்ட்பீட்டும் நாடித்துடிப்பும் நின்றுபோயிருந்தது. அதே நேரத்தில் ""அந்த சரண்யாவும் விஷம் குடிச்சு செத்துட்டாளாம்டா'' என்ற தகவல் இன்னொரு பக்கம் பரவ... கள்ளக்குறிச்சி டவுன் பகுதியையே "உச்' கொட்ட வைத்து விட்டது ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தொடர்புடைய மூவரும் விஷம் குடித்து இறந்த சம்பவம்.
என்ன காரணம்?
""எல்லாம் இந்த பாழாப்போன காதல்தாங்க காரணம்... அரசு பஸ் டிரைவரான நல்ல தம்பியின் ரெண் டாவது பையன்தாங்க இந்த தமிழ்மணி. வீடு, நிலம்னு பணத்துக்குப் பஞ்சமில்லாததால பைக்ல ஹீரோ மாதிரி சுத்திக் கிட்டிருப்பான். யார் வீட்டிலேயோ காது குத்தி, கல்யாணம் நடந்தாக் கூட பார்ட்டி வெச்சு போதையில மிதக்குற பார்ட்டி இவன். பக்கத்திலேயே இருக்கிற மாமந் தூர்ங்கிற பகுதியில் விவசாய நிலத்தைப் பார்த்துக்கச் சொன்னார் அப்பா நல்லதம்பி. அக்ரிகல்ச்சர் சம்பந்தமா படிச்சிருந்ததால இவனும் ஆர்வமா அதை கவனிச்சிக்கிட்டி ருந்தான். அப்போதான் அங்க இருக்கிற சரண்யாங்கிற புள்ளையையும் கவனிக்க ஆரம்பிச்சிருக்கான்.
விவசாயம் வளர்ந்த தோ இல்லையோ... இவங்களுக்குள் காதல் நல்லா பச்சைப் பசேல்னு வளர ஆரம்பிச்சிருச்சு. இவர்கள் அடிக் கடி சந்தித்துக் காதலை பரிமாறிக்கொள்ளும் ஸ்பாட்தான் இந்த கருப்பு அய்யனார் கோயில்.
இந்த அடிக்கடி சந்திப்பைப் பார்த்து அதிர்ந்துபோன சரண்யா குடும்பம், "ஏணி வெச்சாக்கூட எட்டாது. அவங்க பணத்துல உசந்தவங்க... நாம சாதியில உசந்தவங்க' என்று கண்டித்து வீட்டிலேயே இருக்க கண்டிஷன் போட்டிருக்கிறார்கள். அதுக்கப்புறம்தான் இப்படி'' என்று ஊர்மக்கள் சொல்ல... தமிழ்மணியின் நண்பர்களோ, ""எப்பவும் சந்தோஷமா பார்ட்டி வெச்சு கொண்டாடுறவன் மனசு சரியில்லைன்னு சொல்லி பீர், பிராந்தி, பிரியாணின்னு வாங்கிட்டு வந்து பார்ட்டியை ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் சரண்யாவுக்கு ஃபோனை போட்டு, "வீட்டை விட்டு ஓடி வந்திரு. உன்னை கூட்டிட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு கெஞ்சினான். ஆனா, அந்தப் பொண்ணுக்கிட்டேர்ந்து பாஸிட்டிவ்வான பதில் எதுவும் வரல போலிருக்கு. நீங்கள்லாம் போங்கடா அப்புறமா வர்றேன்னான். உன்னை விட்டு நான் எங்கேயும் போகமாட் டேன்டான்னு சொன்ன மஞ்சுநாத் தமிழ்மணி கூடவே போதையில உட்கார்ந்திருந்தான். "மச்சான் சரண்யா இல்லாம இந்த உலகத்துல வாழவே பிடிக்கலடா... செத்துப்போயிடலாம் போல இருக்குடா'ன்னு மப்புல தமிழ்மணி புலம்ப... உடனே மஞ்சுநாத், "ஆய்ய்... காதலிக்காக நீ உசுரை கொடுக்கும்போது நட்புக்காக நான் உனக்கு உசுரைக் கொடுக்கமாட்டேனா'ன்னு சொல்ல... ஆஹா ஓவரா ஏறிருச்சு போலிருக்கு அதான் டயலாக் விட ஆரம்பிச்சிட்டானுங்கன்னு நெனச்சு போதையில நாங்களும் வீட்டுக்கு வந்துட்டோம். ஆனா உண்மையிலேயே பீர்ல விஷத்தைக் கலந்து தமிழ்மணி குடிப்பான்னும், அதை வாங்கிக் குடிச்சிட்டு மஞ்சுநாத்தும் உயிரை விடுவான்னும் நெனைச்சுக்கூட பார்க்கலைங்க'' என்று "உச்' கொட்டுகிறார்கள் வேதனையுடன்.
வ.உ.சி. நகரிலுள்ள தமிழ்மணியின் அப்பா நல்லதம்பியோ ""அந்தப் பொண்ணோட அப்பா நாச்சியப்பன் என்கூட படிச்சவர்தான். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை. மூணு உசுரு போயிடுச்சே'' -புலம்புகிறார்.
நண்பனின் காதலுக்காக உயிர்விட்ட மஞ்சுநாத்தின் வீடு பூட்டிக் கிடக்கிறது. ""அம்மாவுடன் தங்கி பெயின்ட் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். ப்ச்... சொந்த ஊரான புக்குர வாரிக்கு பிணத்தை வாங் கிட்டுப் போனவங்கதான்...'' என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர்.
இறந்துபோன சரண்யாவின் குடும்பத் தினரிடம் பேசியபோது... ""யார் சொன்னது. எம்பொண்ணுக்கு காதலுமில்லை... கத்திரிக் காயும் இல்லங்க. வயித்து வலி தாங்க முடியாம இப்படி ஒரு முடிவை எடுத்துட்டா பாவி'' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.
இன்னும் சிலரோ ""தமிழ்மணி காதலில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை. ஏற்கனவே இப்படித்தான் டவுன்ல பூ வித்துக்கிட்டிருந்த அழகான புள்ளையை பிராக்கெட் போட்டு திருப்பூர் கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணி குடும்பமே நடத்தியிருக்கான். ஆசையும் மோகமும் கொஞ்ச நாள்தானே? அப்பா, அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு அந்தப் பெண்ணை யார்னு கூட தெரியாதுன்னு கழட்டி விட்டுட்டான். 2007-ல் கள்ளக்குறிச்சி மகளிர் ஸ்டேஷன்ல புகாரே இருக்கு. அந்தப் பாவம் சும்மா விடுமா? இதை லேட்டா தெரிஞ்சுக்கிட்ட சரண்யா... "அடப்பாவி... அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டு என்னையும் அதே மாதிரி சீரழிக்கப் பாக்குறியா'ன்னு ஃபோன்ல அழுதுட்டுதான் இவன்கூட ஓடிவர மறுத்திருக்கு. ஆனா இவன் ஃபோன்லயே விஷத்தைக் குடிச்சிட்டதைச் சொல்ல... அவன் செத்துப்போயிட்டா நம்ம மானம்தான் சந்தி சிரிக்கும்னு விஷத்தை குடிச்சிருக்கு'' என்று புதிய தகவலை சொல்லி அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
கருப்பு அய்யனார் கோயில் பூசாரி கண்ணனோ, ""இவங்கள மாதிரி காதலர்கள் மட்டுமில்ல... கள்ளக்காதலர்கள், மது போதை யில வர்ற குடிகார குப்பன்கள் எல்லாரும் இந்த மறைவிடத்துல வந்து கோயிலோட புனிதத் தையே கெடுக்குறாங்க சார். இதை யார் கேட்குறது?'' என்று புலம்ப... அந்த இடமே பீர் பாட்டில், பிராந்தி பாட்டில், நிரோத்கள் என குவிந்து கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முரளியோ, ""ஊர் சுத்தாதடான்னு கண்டிச்சதால தமிழ்மணி தற்கொலை பண்ணிக்கிட்டதாகவும், வயித்து வலியால சரண்யா தற்கொலை பண்ணிக்கிட்ட தாகவும் பெற்றோர்கள் புகார் கொடுத்திருக் காங்க. அந்த அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செஞ்சு விசாரிச்சிக்கிட்டிருக்கோம்'' என்கிறார்.
அடப்பாவமே... தமிழ்மணியின் தீராத விபரீத விளையாட்டால் அவனோட சேர்ந்து ரெண்டு உசுருமில்ல போயிருச்சு!
No comments:
Post a Comment