Sunday, April 25, 2010

முதலுக்கே மோசம்! -தனியார் இன்சூரன்ஸ்...


shockan.blogspot.com

இன்சூரன்ஸ் என்பது காப்பீடா? கழுத்துக்குச் சுருக்கு கயிறா? என மிரள்கிறார்கள் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்.

99 சதவீதம் பேர் தங்களின் பணத்தை "யூலிப்' திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு பணம் பெருகும் என்று ஆசை ஆசையாய் காத்திருக்கும் நேரத்தில்தான்... "யூலிப் திட்டத்துக்கு தடை' என்ற திடீர் அறிவிப்பு முதலீடு செய்தவர்களின் வயிற்றில் மட்டுமல்ல... இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகளின் வயிற்றிலும் ஈட்டியாய் இறங்கி விட்டது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயராமன், ""மாசம் ஆயிரம் ரூபாய் யூலிப் பாலிசியில முதலீடு பண்ணினா அஞ்சு வருஷத்துக்கப்புறம் அஞ்சு லட்சம் கிடைக்கும்னு சொன்னாங்க. 45 மாசம்னு 45 ஆயிரம் கட்டினேன். அதுக்கப்புறம் ஃபேமிலி ப்ராப்ளத்தால... என்னால தொடர்ந்து கட்ட முடியல. இந்த வருஷம் ஜனவரி மாசம் என்னோட பாலிசியை சரண்டர் பண்ணிட்டு கட்டின பணத்தையாவது ரிட்டர்ன் வாங்கிடலாம்னு போனேன். "சரண்டர் சார்ஜ்'ங்குற பேர்ல 20,000 ரூபாயை புடிச்சுக்கிட்டு மீதி 25,000 ரூபாயைத்தான் தருவோம்னுட்டாங்க. "அடக்கடவுளே... இதையெல்லாம் பாலிசி போடும்போது சொல்லவே இல்லை... பாலிசி டாக்குமெண்ட்லயும் இவ்ளோ அமவுண்ட் சரண்டர் சார்ஜ் பிடிப்போம்னு குறிப்பிடப் படலையே'ன்னு கேட்டேன். அதுக்கு "பாலிசி டாக்கு மெண்ட்டை நீங்க சரியா படிக்கலையா சார்? இந்த கம்பெனியின் ரூல்ஸ்படி சரண்டர் சார்ஜ் நேரத்துக்கேற்றபடி மாறும்னு போட்டிருக்கே'ன்னு கூலா சொல்லிட்டாங்க. சரி... மீதி 25 ஆயி ரத்தையாவது சீக்கிரம் கொடுப்பாங்கன்னு பார்த்தா அதையும் இழுத்தடிக்கிறாங்க. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி யை கேள்வி கேட்டு தண்டிக்க வேண்டிய ஐ.ஆர்.டி.ஏ.வுக்கு புகார் கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுத்தபாடில்லைங்க'' என்கிறவர் நொந்து போய் குறிப்பிட்டது ஆங்கில எழுத்து "ஆ 'வில் தொடங்கி "ஆ 'வில் முடியும் இன்சூரன்ஸ் கம்பெனி தான்.

""இதுக்கே இப்படின்னா... மூணு வருஷம் மட்டும் கட்ட வேண்டிய 10 வருட பாலிசியில் முதல் வருஷம் ஒரு லட் சம் கட்டிட்டு... மேலும் கட்ட முடி யாம நாலாவது வருஷம் சரண்டர் பண்ணினப்போ வெறும் 10 ஆயிரத்து 866 ரூபாய் தான் திரும்ப கிடைச்சு துன்னா நம்புவீங்களா சார்?'' என்று அதிர்ச்சியூட்டுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரங்கசாமி. இவர் குற்றம் சாட்டிய எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியின் கோயம்புத்தூர் பிராஞ்ச் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது... "மேனேஜர் பேசுவார்' என்றார்களே தவிர கடைசி வரை நம்மை தொடர்பு கொள்ளவில்லை.

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நீதிமோகனோ ""பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனியில வருஷத்துக்கு 15 ஆயிரம்னு மூணு வருஷத்துக்கு கட்டினா... 20 வருஷம் கழிச்சு பத்து லட்சம் கிடைக் கும்னு சொன்னதால 45 ஆயிரம் கட்டி முடிச்சுட்டேன். கம்பெனிக்கான சர்வீஸ் சார்ஜ் + எனக்கான இன் சூரன்ஸ் கவரேஜ் எல்லாம் புடிச் சுக்கிட்டு மீதி இருக்கிற தொகை யைத்தான் ஷேர்மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றதா சொல்லியிருக்காங்க. 45 ஆயிரம் கட்டினா இன்னும் 17 வருஷத்துல பத்து லட்சம் கிடைக்குமா? இது சாத்தியமான்னு நெனைக்கும்போதே பக் பக்குனுதான் இருக்கு'' என்கிறார்.

அடுத்து நம் செல்ஃபோனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஆச்சர்யத்தில் கண்களை சுழல வைத்தது. "டாடா குரூப் இன்சூரன்ஸ் கம்பெனியில் மூன்று வருடங்களுக்கு மட்டும் மூன்று லட்சம் முதலீடு செய்தால் போதும்... அடுத்த பத்தாவது வருடத்தில் 20 லட்சம் (அடேங்கப்பா!) நிச்சயமாக கிடைக்கும். டேக்ஸ் இல்லாமல் லைஃப் கவர் (முத லீட்டாளர் இறந்துவிட்டால்) 25 லட்சம் உண்டு. கான்டெக்ட் 97911-87348 என்று செல் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது. டாடா குரூப் கம்பெனியின் எஸ்.எம்.எஸ். தானா? உடனே டயல் செய்தோம் அந்த செல் நம்பருக்கு. தன்னை சுரேஷ் என்றும்... டாடா குரூப் இன்சூரன்ஸ் கம்பெனியின் ஏஜெண்ட் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம்... ""மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தாவது வருடத்திலேயே 20 லட்சம் கிடைக்குமா? எப்படி இது சாத்தியம்?'' என்றோம். ""கண்டிப்பாக கிடைக்கும் சார்...'' என்று அசராமல் உறுதியாக பேசியவரிடம்... தோண்டி துருவிக் கேட்க ""பங்குச் சந்தையின் வளர்ச்சி அதிகமாயிடுச்சுன்னா... கண்டிப்பா 14 லட்சம் வரை (!) கிடைக்கும் சார்'' என்றார். ""பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை எப்படி கண்டிப்பாக... உறுதியுடன் என்று உத்திர வாதத்துடன் சொல்கிறீர்கள்? பாசிபிலிட்டி இருக்கிறது என்றுதானே சொல்ல வேண்டும்?'' என்று கிடுக்கிப்பிடி போட்டபோது, ""ஏழிலிருந்து எட்டு லட்சம் வரை கிடைக்கும் சார்'' என்றார். 20 லட்சம் என்பது பேசப் பேச தேய்ந்து கொண்டே வந்ததை நம்மால் உணர முடிந்தது.

இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணரும், பொருளாதார வல்லுநருமான நாகப்பன் புகழேந்தியிடம் பேசினோம். ""டாடா குரூப் இன்சூரன்ஸ்னு சொல்லிக் கொள்வதே தவறு. ஏன்னா... அதனுடைய முழுப்பெயர் டாடா ஏ.ஐ.ஜி. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி. அதாவது அமெரிக்காவில்... நஷ்டத்துல நொடிச்சுப் போய் விழுந்த இன்சூரன்ஸ் கம்பெனியை அரசாங்கமே பாவம் பார்த்து நிதியுதவி செஞ்சு... எழுந்து உட்கார வெச்ச கம்பெனிதான் இந்த ஏ.ஐ.ஜி. அதுதான் இந்தியாவின் டாடாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டு யூலிப் பாலிசி திட்டத்தை பொதுமக்களிடம் விற்றுக்கொண்டிருக்கிறது. அதே மாதிரி எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியை பலர் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவின் கம்பெனி என்று நம்பிக்கையுடன் "யூலிப்' திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். அது தவறு. கார்டிஃப் என்கிற வெளிநாட்டு இன்சூரன்ஸ் கம்பெனி எஸ்.பி.ஐ.யோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அவ்வளவுதான். இதுபோல பல பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் நம்ம நாட்டு கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்து யூலிப் பாலிசி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அஞ்சாயிரம் இருந்தாக்கூட தனிநபர் டைரக்டா ஷேர்மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றது கஷ்டம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி அறிந்த நபர்களின் மூலம் ஆயிரம் ரூபாயை கொடுத்து முதலீடு செய்ய முடியும். அதனால்தான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த நிறுவனம் அரசு சார்ந்த கடன் பத்திரங்கள், ஐ.டி. ஃபீல்டு, தொழில் நிறுவனங்கள் என்று பரவலாக முதலீடு செய்யுறதால எதாவது ஒரு முதலீட்டில் நஷ்டப்பட்டாலும் இன்னொரு முதலீட்டில் லாபம் கிடைச்சிடும். அதனால முதலுக்கும் மோசம் போகாம இருக்கலாம். சிலசமயம் நல்ல லாபமும் கிடைக்கும். இது முதலீட்டுத் திட்டம். ஆனால், இன்சூரன்ஸ் பாலிஸியில் பெரிய அளவுல வருமானம் பார்க்க முடியாத இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்கள்... இந்த முதலீட்டுத் திட்டத்தை சம்பந்தமே இல்லாத காப்பீட்டுத் திட்டத்தோடு இணைத்து "யூலிப்' பாலிசி என்னும் கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்கி முதலீட்டாளர்களை முட்டாளாக்கிட்டிருக் காங்க'' என்கிறவர்... ""பதினைந்து வருடத்திலிருந்து 20 வருஷம் வரை கட்டவேண்டிய பிரிமியம் தொகையை மூணு வருஷத்துக்கு கட்டினாலே போதும். அதற்குப் பிறகு அதுவே தன்னைத்தானே கவரேஜ் ஆகி இறுதியில் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று வாய்மொழி உத்திரவாதமே கொடுக்க ஆரம்பித்து தான் முதலீட்டாளர்களை வசீகரிக்க ஆரம்பித்து விட்டது. தவறான எதிர்பார்ப்பையும் உருவாக்கிடுச்சு.

ப்ரைன்வாஷ் பண்ற இன்சூரன்ஸ் ஏஜெண்டு களும் மக்களிடம் நிறைய ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவதை டாக்குமெண்ட்டில் எழுத்து பூர்வமாக கொடுக்கிறதில்லை. "யூலிப் பாலிசியின் முதலீடு செய்வது சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து மாறும் . நாங்கள் சொல்லும் அமவுண் டிற்கு உத்திரவாதம் இல்லை. சந்தை ரிஸ்க்குக்கு உட்பட்டதே' என்பதை தெளிவாக அந்தந்த மாநில மொழிகளில் குறிப்பிடவேண்டும்.

மேலும், முதலீடு செய்து பணம் பெருக்க வேண்டுமென்றால் மியூச்சுவல் ஃபண்டில் போடுவது பாதுகாப்பு. இன்சூரன்ஸ் வேண்டுமென்றால் அரசு காப்பீட்டு கழகங்களில் போடலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று நினைத்து காப்பீடு + வருமானம் என்று யூலிப் பாலிசி போட்டால் ஒரு மாங்காயும் ஒழுங்கா கிடைக்காது'' என்கிறார் அதிரடியாக.

தனியார் இன்சூரன்ஸ் டெவலப் மென்ட் ஆபீஸர்கள் சிலரோ... ""அரசு விதிப்படி மூணு வருஷம் ப்ராஃபிட் காண்பிச்சாதான் ஸ்டாக் மார்க்கெட்டின் பட்டியலில் இடம் பெற முடியும். ஏழு வருஷம் ஆகியும் எல்.ஐ.சி.யைத் தவிர எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் வருமானம் காண்பிக்கல. அப்படின்னா... ஷேர் மார்க்கெட்ல என்ன வருமானம் பெற்று முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப் போறாங்க? அதே மாதிரி யூலிப் பாலிசியில் முதலீட்டாளரும் "ஷேர் ஹோல்டர்' என்பதை மறந்துடக்கூடாது. லாபம் ஈட்டினால் லாபம்... இல்லையென்றால் நாமம்தான்.

ஒரு லட்சம் முதலீடு பண்ணும்போது முதல் வருஷத்துல அலிகேஷன் சார்ஜ்னு 15%-ல் இருந்து 60 சதவீதம் வரை பிடிப்பாங்க. லைஃப் கவருக்கு வேற குறிப்பிட்ட அமவுண்ட் போகும். ஆக, முதல் வருட ஒரு லட்சத்தில் 60 ஆயிரத்தை சாப்பிட்டு ஏப்பம் விடும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வெறும் 40 ஆயிரத்தைத்தான் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்யும். ஏற்கனவே பங்குச் சந்தை ஆட்டம் கண்டிருக்கும் சூழலில் என்ன ப்ராஃபிட் வரும் முதலீட்டாளர்களுக்கு? அதனாலதான் ஈக்விட்டி ஷேர், க்ரோத் ஃபண்ட், ரிஸ்க் ஃபண்டுனு சொல்றோம்.

அலிகேஷன் சார்ஜுக்கும், அலிகேஷன் ரேட்டுக்கும் வித்தியாசம் இருக்கும். அலிகேஷன் ரேட் 40 சதவீதம்னு போட்டிருந்தா 40 சதவீதம்தான் நம்ம பணத்தை முதலீடு பண்றாங்கன்னு பலருக்கும் தெரியாது. வருஷத்தின் முடிவுல பணம் கட்டின முதலீட்டாளர் போய் கேட்டா ஷேர்மார்க்கெட் டவுன் ஆயிடுச்சு... லைஃப் கவருக்கு அமவுண்ட் பிடிச்சுக்கிட்டோம்னு கட்டுன தொகையைக்கூட முழுசா கொடுக்காம பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விரட்டி அடிச்சதாலதான் யூலிப் பாலிசியை விற்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான "செபி' தடை விதிச்சது.

ஆனா முதலீட்டாளர்களைப் பற்றி கவலைப்படாத ஐ.ஆர்.டி.ஏ., யூலிப் பாலிசியை வித்துக்கச் சொல்லுது. இப்போ... செபிக்கும்- ஐ.ஆர்.டி.ஏ.வுக்குமான யுத்தம் கோர்ட்டுக்கு போயிருக்கு. அரசு நிறுவனங்களில் பணி புரியிறவங்க ஐ.டி. கட்டுறதுக்குப் பயந்து இந்த மாதிரி "யூலிப்' போடுறாங்க. ஆனா, புள்ளைகளோட கல்யாண செலவு, படிப்பு செலவு, ஓய்வு பெறும்போது காப்பாற்றும்னு நம்பி "யூலிப்'ல பணம் முதலீடு பண்றவங்களுடைய நிலைமை பரிதாபத் துக்குரியது'' என்கிறார்கள் சமூக அக்கறையுடன்.

1 comment:

  1. வேண்டுகோளை ஏற்று பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி ஷோகன்.

    ReplyDelete