Thursday, April 15, 2010

அரசு அதிகாரிகள் பார்க்க வேண்டிய படம்!

shockan.blogspot.com
"கட்டிடங்கள் சிரிக்கிறது... ஆனால் அஸ்திவாரங்கள் அழுகிறது' என்றொரு வாக்கி யம் உண்டு! இது வாழ்க்கைக்கும் பொருந்தும். சென்னையின் இருதயப்பகுதியான தி.நகர். ரெங்கநாதன் தெரு உலகத் தமிழர்வரை பிரசித் தம். அங்கே பிரமாண்டமாக உயர்ந்து நின்று பளபளப்பு காட்டுகிற சில வணிக வளாகங்களில் தங்கம் முதல் தகடு வரை, துணி முதல் மணிவரை கிடைக்கிறது... மனிதாபிமானத்தைத் தவிர!

குடும்பத்தலைவன் இல்லாமல் பிழைப்பு நடத்தவே சிரமப்படுகிற கிராமத்து வீடுகளின் இளைஞர்களும், இளம் பெண்களும் குறைந்த சம்பளத்தில் சென்னையின் இந்த வணிக வளாகங் களுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பும், மனித உரிமைகளும் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது.... இதற்கு அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் உடந்தையாக இருக்கிறார்கள்... என்பதை ரசிகர்களின் நெஞ்சு பதறப்பதற படமாக்கியிருக்கிறார் டைரக்டர் வசந்தபாலன்.

கொத்தனார் அப்பா... மகன் லிங்கத்தை இஞ் ஜினியராக்க நினைக்கிறார். ஆனால் அப்பா விபத் தில் இறந்ததால் +2-வில் நல்ல மார்க் வாங்கியும் தன் இஞ்ஜினியர் ஆசையை குழி தோண்டி புதைத்துவிட்டு சென்னையின் "செந்தில் முருகன்' ஸ்டோருக்கு வேலைக்கு வருகிறான். அங்கே ஏற்கனவே பணிபுரியும் கனியோடு அவனுக்கு மோதல். மேனேஜரிடம் போட்டுக் கொடுக் கிறான். கனியை தண்டிக்க தனி யறைக்குள் கொண்டு செல்கிறார் மேனேஜர்.

"ஆம்பளைங்கள அஞ்சு நிமிஷம் அடிச்சு உதப்பாரு மேனேஜர். உன்னய மூணு நிமிஷத் துலயே விட்டுட்டாரே. பொட்டச்சினு விட்டுட் டாரா?' என லிங்கம் கேட்க... "மார்பை புடுச்சு பிசைஞ்சான். நான் பேசாம இருந்தேன். அதான் சீக்கிரமே விட்டுட்டான்' என அவள் சொல்கிற போது லிங்கம் மட்டுமல்ல... ஒட்டு மொத்த ரசிகர்களும் உறைந்தே போகிறார்கள். அத்தனை பாலியல் தொல்லைகளையும் குடும்பத்திற்காக தாங்கிக் கொண்டு... ‘"அக்கா... வாங்கக்கா...' என அவள்பாட்டுக்கு வியாபாரத்தை கவனிக்கிறாள்.

இந்த மோதலுக்குப்பின் லிங்கத்திற்கும், கனிக்கும் காதல். இதன் காரணமாகவே வேலை யிலிருந்து திருட்டுப் பழி சுமத்தி துரத்தியடிக்கப் படுகிறார்கள். அங்கும் அவர்கள் பல துன்பங் களையும், துயரங்களையுமே சந்தித்தாலும் கூட... நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

எத்தனை டாக்டர்கள், எத்தனை விஞ்ஞானி கள் தங்கள் குடும்பச்சுமையால் அந்த அங்காடித் தெருக்களில் நசுங்கிக் கிடக்கிறார்களோ? என்கிற கேள்வி நம் மனசை குடைகிறது.

சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, மனிதவளத்துறை... இப்படிப்பட்ட அரசு இயந்திரங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். படம் முடிந்து எழுகையில் இந்த மாதிரி கடைகளில் போய் பொருட்கள் வாங்க வேண்டுமா? அப்படியே வாங்கினா லும் அந்த ஊழியர்களை பாசத்தோடு ஒரு பார்வை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் எண்ணத்தில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

No comments:

Post a Comment