Sunday, April 18, 2010

நிலமோசடி காமெடி!


shockan.blogspot.com
வடிவேலு - சிங்கமுத்து சங்கதி தெரியும். கதிர்வேலு - புலிமுத்து சங்கதி தெரியுமா?

அடங்ஙொக்காமக்கா... இதென்ன கூத்து?

தஞ்சாவூரைச் சேர்ந்த கதிர்வேலு பிழைப்பிற்காக மலேசியா போகிறார். கை நிறைய்ய சம்பாதிக்கும் அவர் ஊர் திரும்பி தனது பணத்தில் நிலம் வாங்கிப் போட ஆசைப்படு கிறார். இது குறித்து மலேசிய ரிடர்ன் கந்தனிடம் விவாதிக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த நில புரோக்கர் புலிமுத்து தலையிட்டு பல இடங்களை காட்டுகிறார். புலிமுத்துவின் கூட்டாளிகளான மேலும் சில நில புரோக்கர்களும் பல இடங்களை காட்டுகிறார்கள். இதன்படி தனக்கு பிடித்தமான இடங்களை கதிர்வேலு வங்கிப் போடுகிறார்.

அப்படி வாங்கிப் போட்ட ஒரு இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜையை ஆரம்பிக்கிறார் கதிர்வேலு. அப்போது "திபுதிபு' என துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு ராணுவ வீரர்கள் வந்து கதிர்வேலுவை சுற்றி வளைக்கிறார்கள்.

கதிர்வேலு அதிர்ந்துபோய் பார்க்க... ‘"ஏண்டா... மிலிட்ரிக்கு சொந்தமான இடத்துல கட்டிடம் கட்றியா?' என எச்சரிக்க... அதிர்ந்து போகிறார் கதிர்வேலு.

"அய்யய்யோ... தலைவரே... தெரியாம நானும் ஏமாந்து... நீங்களும் ஏமாந்துட்டீங்களே?' என வருத்தப்படுகிறார் புரோக்கர் புலிமுத்து. அதன்பின், தான் வாங்கிய இன்னொரு இடத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்தால்... அது தஞ்சாவூருக்கு குடிநீர் வழங்கும் ஏரி. கடைசியாக ஊருக்கு வெளியே தான் வாங்கிய இடத்தில் பூமிபூஜை செய்யப்போகிறார் கதிர்வேலு.

உடனே... ஊர்க்காரர்கள் சுற்றி வளைக்கிறார்கள்.

ஏன்?

அது சுடுகாட்டு நிலம்.

இப்படித்தான் புலிமுத்துவிடம் கதிர்வேலு ஏமாந்து போகிறார் போலி பத்திர நில மோசடியால்.

வடிவேலு - சிங்கமுத்துவின் சங்கதியைப் போல் இருக்கும் இது, கரண் ஹீரோவாக நடித்து வரும் "கந்தா' படத்தில் இடம் பெறும் காமெடி காட்சிகள்.

உதவி இயக்குநர் ஒருவர் மூலம் நமக்கு இந்த தகவல் கிடைக்க... படத்தின் இயக்குநர் பாபு.கே.விசுவநாத்திடம் கேட்டோம்.

""வடிவேலு-சிங்கமுத்து பாதிப்பில்தான் இந்த காமெடி காட்சிகளை உருவாக்கினோம். போலி நிலம் மூலம் பணத்தை இழந்த கேரக்டரில் விவேக் நடித்திருக்கிறார். "கந்தா'வாக வரும் கரண் மூலம் ‘ஏமாந்த பணத்தையெல்லாம் விவேக் எப்படி புது டெக்னிக்கில் மீட்டெடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறோம். பொதுவாகவே இப்போது நில மோசடி விவகாரம் நாடு முழுக்க நடப்பதால் நகைச்சுவை மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கவே இந்த காமெடியை வைத்துள்ளோம். மற்றபடி யாரையும் நோகடிக்க வேண்டும் என்கிற எண்ணமில்லை'' என்றார் ‘திருவாரூர் பாபு என்ற பெயரில் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட டைரக்டர் பாபு.கே.விசுவநாத்.

சினிமா சம்பவங்கள் சில சமயம் வாழ்க்கையாகிறது. வாழ்க்கைச் சம்பவம் சில சமயம் சினிமாவாகிறது.

No comments:

Post a Comment