shockan.blogspot.com
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதற்கு முக்கிய பங்குவகித்த காரணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இந்திய செய்தியாளர் சி.கே.சசிகுமாருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடசங்கற்பம் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. துணிச்சலான பல தீர்மானங்களை அவர் மேற்கொண்டார்.
அந்தச் செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பாக கூறியுள்ளதாவது: பொதுவாக சண்டைகளில் படையினர் சண்டையிடுவது, இராணுவ வாகனங்கள் முதலானவற்றையே சண்டைக்களத்துக்கு வெளியே உள்ளவர்கள் காண்பர். ஆனால் சண்டைக் களத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு யுத்த தந்திரோபாயங்கள் தென்பட மாட்டாது. நான்கு ஜனாதிபதிகளின் கீழ் 8 அரசாங்கங்கள் புலிகளை தோற்கடிப்பதற்குத் தவறின. அந்த நான்கு ஜனாதிபதிகளின் கீழும் சிறந்த இராணுவத் தளபதிகளும் படையினரும் இருக்கவில்லை என்று கூறமுடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபோது ஏற்கெனவே 26000 படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் ஆலோசகர்களும் 1987ஆம் வடமராட்சி நடவடிக்கை முதல் கினிஹிர 9 நடவடிக்கை வரையான முந்தைய யுத்த நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்தனர்.
புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால யுத்தத்தின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வதே இதன் நோக்கமாக இருந்தது. தோல்விக்கான ஒவ்வொரு காரணிக்கும் ஒரு தீர்வை நாம் கண்டுபிடித்தோம்.
உண்மையில் இராணுவத்துடன் தொடர்பான தோல்விக் காரணி எதுவும் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தால் முந்தைய 30 வருடகாலமாக புலிகளுக்கு எதிராக போராடிய அதே இராணுவத்தைக் கொண்டே போரிட வேண்டியிருக்கும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எமது இராணுவத்திலும் விசேட படையினரிலும் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் நாட்டின் இராணுவத்தின் முழுப் பலத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாமைக்கான காரணம் என்ன என ஆராய்நதோம். இதற்குத் தீர்வாக படையினரின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். ஆயுதப் படையால் யுத்தத்தை முடிப்பதற்கு முடியாதிருந்தமைக்கான காரணம் எண்ணிக்கை குறைபாடே என்பதையும் இராணுவத்தை விஸ்தரிப்பது புலிகளுக்கு நிச்சயமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்தோம். எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முந்தைய இரு தோல்விக் காரணிகளை தீர்க்க ஆயுதப் படைகளால் முடிந்தது.
கிழக்கு மாகாணத்தை நாம் சுத்திகரித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் தோற்கடிக்கப்படவில்லை எனவும் தாம் தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டதாகவும் கூறினர். கிழக்கு மாகாணத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை ஆயுதப் படைகளிடம் போதிய துருப்புக்கள் இருக்கமாட்டாது என புலிகள் நம்பினர். முந்தைய காலத்தைப் போல தாம் வடக்கில் போர்முனையொன்றைத் திறந்தால் இலங்கைப் படையினர் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டிருக்கும் எனவும் அதன் மூலம் தாம் மீண்டும் கிழக்கை கைப்பற்றிவிடலாம் எனவும் புலிகள் நம்பினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர்கூட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்கமாட்டாது என பகிரங்கமாகக் கூறினர். நாம் உண்மையில் பரந்தளவிலான போர்முனையிலும் பல் போர்முனையிலும் போரிடுவதற்குத் தயராக இருந்தோம் என்பதை புலிகள் குறைவாகவே அறிந்திருந்தனர்.
படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரே இரவில் சாத்தியமாகாது என்பதை அறிந்திருந்தோம். அதனால் கடற்படை, விமானப் படையினரையும் தரை யுத்த நடவடிக்கைளில் ஈடுபடுத்தினோம். அதற்கேற்ப நாம் அவர்களுக்கு பயிற்சியளித்தோம். ஆகவே நிலத்தை தக்கவைப்பதற்கான எமது பலம் திடீரென அதிகரித்தது.
யுத்தத்தின் கடைசி மாதத்தின் இரு வாரங்களில் நாம் சிவில் பாதுகாப்புப் படைக்கு 5000 பேரை சேர்த்தோம். ஒவ்வொரு மாதமும் 5000 படையினரை இணைத்ததன் மூலம் இராணுவத்தின் எண்ணிக்கை மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரித்தது.
படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட எமது நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கருதி முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் துணிச்சலான தீர்மானங்களை மேற்கொள்ளத் தயங்கினர்.
2005ஆம் ஆண்டில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கையை இயன்றவரை விரைவாக 500 000 ஆக அதிகரிக்க வேண்டும் என நான் கூறினேன். படைகளின் உயர் தலைவர்கள் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் இராணுவ நடவடிக்கைள் குறித்து அலசினர். எந்த படைத்தளபதியும் தேவையான ஆயுதத்தையோ அல்லது வேறு எதையுமோ கேட்கக்கூடிய நிலை இருந்தது. படைகளின் இழப்புக்கள் குறித்த அழுத்தங்களை எதிர்கொள்வதிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.
மூன்றரை வருடகாலத்தில் ஏறத்தாழ 6000 படையினர் கொல்லப்பட்டனர். இது குறித்த அரசியல் அழுத்தத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் அழுத்தத்தை ஜனாதிபதி எதிர்கொண்ட முறையும் யுத்த வெற்றிக்கு முக்கிய காரணியாகும். இந்தியாவை எமது தரப்பில் இணைத்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி உணர்ந்தார். 1987 ஆம் ஆண்டின் ஒபரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கையின்போது இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை ஜனாதிபதி விரும்பவில்லை. 2005 முதல் 2009 வரை இந்தியா எமது படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. புதுடில்லிக்கு நாம் முறையாக விளக்கமளித்து வந்ததன் மூலம் அவ்வாறன நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்கவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒரு கூட்டு அரசாங்கம் என்பதால் தனது பங்காளிக்கட்சிகளின் குறிப்பாக தி.மு.கவின் கரிசனைகள் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானவை என்பதை நாம் உணர்ந்திருந்தோம்.
பொதுமக்களின் இழப்புகள் தொடர்பாக தமிழ்நாட்டில் ஏற்படும் உணர்ச்சிமய நிலையை நாம் உணர்ந்திருந்தோம். ஆகவே இந்தியத் தலைமைக்கு நிலைமையை விளக்குவதை ஜனாதிபதி உறுதிப்படுத்தி வந்தார். எமது தரப்பில் பசில் ராஜபக்ஷ, லலித் வீரதுங்க மற்றும் நான் ஆகியோர் இந்தியாவின் எம்.கே. நாராயனன், சிவ்சங்கர் மேனன், விஜய் சிங் ஆகியோருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம். ஏதேனும் முக்கிய விவகாரம் எழும்போது நாம் சந்தித்து அதை தீர்த்துக்கொண்டோம். இதன் மூலம் எமது படை நடவடிக்கைகள் இடையூறின்றித் தொடர்ந்தன. இந்த யுத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடிந்தமையும் வெற்றிக்கு பங்காற்றியது
No comments:
Post a Comment