Wednesday, April 21, 2010

பற்றி எரியும் சா"தீ'! -துப்பாக்கிச் சூடு பதட்டம்!


shockan.blogspot.com

கோயில் திருவிழாவையொட்டி பா.ம.க.விற்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் நடந்த மோதல் சா"தீ'யாக எரியத் தொடங்கி சேலம் கொளத்தூர் கருங்கல்லூரை துண்டாக்கி அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது. மோதலை அணைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு பா.ம.க.வை சேர்ந்த சாமிதுரையை சீரியஸாக்க... சேலம் ஜி.எச். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த சாமிதுரையை சந்தித்தோம்.

"அய்யோ அம்மா' என முனகிக் கொண்டிருந்தார். ""குண்டு வலது கையில துளைச்சு வயித்தை கிழிச்சு வெளிய போயிருக்கு. படுபாவிங்க பக்கத்துல இருந்து சுட்டுருக்காங்க'' என்றனர் அருகிலிருந்த பா.ம.க.வினர். மறுபக்கம் காயங்களுடன் காவல்துறையினர் படுத்திருக்க, சீரியஸ்னஸை உணர்ந்து நாம் கோடை வெப்பத்தை கிழித்தபடி கலவர பூமிக்குள் காலடி வைத்தோம். வெறிச்சோடியிருந்த ஊரில் பந்தோபஸ்தில் காவல்துறையினர் மட்டும் இருக்க அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""இதுபோன்ற ஒரு அட்டாக்கை நாங்க இதுவரை பார்த்த தில்லை. சாலை மறியல்னு தான் ஊர்க்காரங்க ரோட்ல உட்கார்ந்தாங்க. வழக்கமானதுதான்னு நெனைச்சு சமாதானப்படுத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு ஒரு கல்லு எங்கிருந்துதான் வந்ததோ தெரியலை. எங்க இன்ஸ்பெக்டர் சிவ லிங்கத்தோட பல்லைப் பதம் பார்த்தது. அவ்வளவுதான். அடுத்து கண்ணை மூடி கண்ணைத் தொறக்குறதுக்குள்ள நாலா பக்கமும் திபுதிபுன்னு ஊர்க்காரங்க வந்து சரமாரியா கல்லால தாக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க நடுவுல மாட்டிக்கிட்டோம். கண்ணீர்ப்புகை வீசியும் யாரும் அசரலை. அப்புறமாத்தான் சூட்டிங் நடத்தினோம். கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பேருக்கு மத்தியில இருந்து உயிர் பிழைச்சத நினைச்சா இப்பவும் கிலி பிடிக்குது'' என்றனர் பயம் நீங்காமல்.

சாலையெங்கும் ஆங்காங்கே கற்கள் பரவி விரவி கிடக்க, வன்னியர் குடியிருப்புகளை நோக்கி ஊருக்குள் நுழைந்தோம். வீடுகள் மூடியும், கடைகள் அடைத்தும் மயான அமைதி நிலவ... ""அண்ணே பத்திரிகைக்காரங்களாண்ணே'' என ஓடோடி வந்த தமிழ், ""டீச்சர் டிரெய்னிங் முடிச்சிட்டு லீவுல வந்தான் என் தம்பி. திடுதிப்புனு போலீஸ் வந்து தரதரன்னு இழுத்துட்டு போச்சு. அவனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கண்ணா, கூலி வேலைக்குப் போயி 10 வட்டிக்கு வாங்கித்தான் அவனை படிக்க வைக்கிறோம். அவனை பிடிச்சிட்டுப் போகவும் இப்ப படிப்பு பாழாப் போகுதே. என் தம்பியை எப்படியாவது காப்பாத்துங்கண்ணா'' என்றார் கண்ணீரை அடக்க முடியாமல்.

உண்மையறிய காந்தி நகர் காலனிக்குள் நுழைந்தோம். பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டும், குடிசைகள் எரிக்கப்பட்டும் இருக்க... எதிரே தென்பட்ட வடிவழகனிடம் பேசினோம். ""வருசா வருசம் சித்திரையில நடக்குற ஊர் பத்ரகாளியம்மன் கோயில் பண்டிகைக்கு அவிங்க (வன்னியர்) எங்களைத்தான் மேளம் அடிக்க கூப்பிடுவாங்க. இந்த முறை எங்களை விட்டுட்டு பக்கத்து தெருவுல உள்ள அருந்ததியர் ஜனங்களை கூப்பிட்டாங்க. இதுபற்றி நாங்க கேட்டப்ப, வன்னியருங்களும், பா.ம.க. கட்சி மாரப்பனும் "என்னடா நாங்க எதிர வந்தா குனிஞ்சுப் போறவங்க இன்னிக்கு எங்ககிட்டயே நாயம் கேக்குறீங்களா'னு சொல்லி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. காலனிக்குள்ள புகுந்து ஊரையே நாசமாக்கிட்டாங்க.

ஆறு மாசம் முன்னாடியே இங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வச்சோம். அதை ஐந்தாறு முறை பா.ம.க.காரங்க வெட்டிட்டாங்க. அதனால இங்கவுள்ள விடுதலைச் சிறுத்தைக்காரங்க எம்.எல்.ஏ. கோ.க.மணி மேலயும், மாரப்பன் மேலயும் பி.சி.ஆர். கேஸ் கொடுத்துட்டாங்க. அத மனசில வச்சுதான் தருணம் பார்த்து இப்ப நொறுக்கிட்டாங்க'' என்றார் விரிவாக.

""இது மட்டுமில்லீங்க... எங்களுக்கு டீக்கடை போனா ரெட்டை டம்ளர்தான். விவசாய வேலைக்கு எங்களுக்குக் கூலி அவங்காளுங்களைவிட கம்மியாதான் தருவாங்க. ஏன் இப்போ நாங்க கக்கூஸ் போற எடத்தைக்கூட முள்ளு போட்டு அடைச்சிட்டாங்க. நாங்கள்லாம் வாழுறதா வேண்டாமா?'' -வேதனையோடு கலா என்பவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தனது படை பரிவாரங்களோடு பா.ம.க. கோ.க.மணி அங்கு விசாரிக்க வந்தார். அவரை முற்றுகையிட்டு காந்தி நகர் வாசிகள் குமுற, பதில் கூற முடியாமல் நெளிந்தபடியே அங்கிருந்து கோ.க.மணி வன்னியர் குடியிருப்புகளுக்கு நகர்ந்தார்.

""போலீஸ் எல்லாரையும் பிடிச்சிட்டுப் போகுதுங்க. ஆம்பளைகளெல்லாம் தலைமறைவா இருக்காக. பாக்குறவங்கள எல்லாம் போலீஸ் அடிக்கிது. இப்படியே போனா முண்டச்சிகளாதான் நாங்க திரியணும்'' -பெண்கள் கண்ணீரோடு கூற ""கவலைப்படாதீங்க நான் வந்திட்டேனில்ல... பொறுமையா இருங்க'' என ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் கோ.க.மணி

அவருடனிருந்த மாரப்பனிடம் பேசினோம்...

""அவங்க போட்ட பி.சி.ஆர். கேஸ்ல முகாந்திரமில்லைன்னு காவல்துறையே மணி அய்யாவையும் என்னையும் குற்றச்சாட்டுல இருந்து நீக்கிருச்சு. மத்தபடி ஆதி திராவிட மக்களை தாயா, புள்ளையாதான் நினைக்கிறோம். எங்க கட்சிக்காரங்க நாலு பேரை நைட்டோட நைட்டா போலீஸ் புடுச்சிட்டுப் போயிடுச்சே. அதே நேரம் வி.சி.ஆட்கள் கொளத்தூர் செக்போஸ்ட்ல டயரை எரிச்சி எங்களுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அவங்க மேல இதுவரை புகார் தந்தும் கைது செய்யலை. காரணம் டி.எஸ்.பி. சிவானந்தம் அவங்க சாதிக்காரரு.. அந்த சாதி பாசத்துலதான் சாலை மறியல் செஞ்சிக்கிட்டு இருக் கும்போதே எங்க கட்சி மா.துணை செயலாளர் ராஜேந்திரனையும், டாக்டர் சிவகுமாரையும் அடிச்சு தரதரனு இழுத்திட்டுப் போயி ஜீப்ல டி.எஸ்.பி. ஏத்துனாரு. அதனாலதான் ஊர்க்காரங் களுக்கு கோவம் வந்திடுச்சி. ஆனா உடனடியா துப்பாக்சிச் சூட்டை எதிர்பார்க் கலை. எஸ்.ஐ.நட்ராஜ்தான் சாமிதுரைய சுட்டது. இதை நாங்க சும்மாவிடமாட்டோம்'' என்றார் கோபம் கொப்பளிக்க.

ஸ்பாட்டிற்கு வந்த கோவை மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, காவலர் கூட்டம் நடத்தி மேலும் அதிகாரத்தை கொடுக்க தற்போது கருங்கல்லூரைச் சேர்ந்த 786 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. மறுபுறம் "துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான வி.சி. தமிழ்மணிக்கும், காந்தி நகருக்கும் பதிலடி தந்தேயாகணும்' என வன்னியர் தரப்பில் ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறது. வி.சி. முக்கிய புள்ளிகள் தலைமறைவாக... பதற்றம் குறையாமலேயே இருக்கிறது சேலம் கொளத்தூர் பகுதி.

No comments:

Post a Comment