- shockan
கோடை வெயில் மிகவும் கொடுமையாக இருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிக வெயில். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது சுப்பாண்டி தான் சொல்லுவதாக கூறினான்.
ஏதோ சஹாரா பாலைவனத்தில் பட்டாணி வித்தவன் போல பல பாயிண்டுகளை கூறினான். எனக்கே அவனின் அறிவு முதிர்ச்சிகண்டு மிகவும் புல்லரித்தது. அதன் காரணம் கடைசியில்...!
சுப்பு சொன்ன பாயிண்டுக்கள் இதோ :
கோடை முடியும் வரை தளர்வான ஆடைகளே உபயோகியுங்கள். ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ சர்ட்டுக்கள் தவிர்க்கவும்.
முடிந்தவரை அதிக காரம் மற்றும் மசால உணவுகளை தவிர்க்கவும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி பழங்களை சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் அருந்தலாம்.
தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறை குளிக்கவும்.
குளிர்ச்சியான பானங்களைவிட குளிர்விக்கபடாத பானங்கள் உடலுக்கு நல்லது.
பகல் நேரத்தில் வெளியே பயணிக்கும் பொழுது தலையில் தொப்பி அல்லது துணியை தலைப்பாகை போன்று அணிந்து கொண்டு செல்லலாம். அதற்காக காவி துணி எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு தெருவில் நடந்தால் விபரீதம் சம்பவிக்கும். இதற்கு கம்பெனி பொறுப்பல்ல.
நீச்சல் குளம் அல்லது ஆறுகள் அருகே இருந்தால் வாரம் ஒருமுறை நீராடவும்.
பெரிய அண்டா போன்ற பாத்திரம் வீட்டில் இருந்தால் அதில் தண்ணீர் நிரப்பி அதில் அரைமணி நேரம் அமரலாம்.
கோடை கால பானம் : நாக்கு வரண்டு இருக்கும் சமயம் வேதிப்பொருட்கள் நிறைந்த குளிர்பானம் குடித்து உடலை கெடுத்துக்க கூடாது. ஒரு மண் பானை வாங்கி மண் வாசனை போக அதை நன்றாக கழுவி எடுக்கனும். காலை ஆறு மணிக்கு அதில் 2 டம்ளர் மோர் , 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கணும். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு கொஞ்சம், எலுமிச்சை தோல் சிறிது, சுக்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து மூடி வைக்கவும். பகல் 10 மணிக்கு மேல் அதை எடுத்து ஒரு வாய் குடிச்சா உங்களுக்கு அண்டார்டிக்காவில் இருப்பது போல இருக்கும். தில் மாங்கே மோர் என சொல்லத்தோன்றும்...!
குளிர்சாதன அறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள். வெப்பம் தாங்கும் சக்தியை உங்கள் உடல் இழந்து, கோடை தாக்குதலால் உடனடியாக உடல் பாதிக்கப்படும். முடிந்த அளவு மின்விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகள் இல்லாமல் இயல்பு வெப்பத்தில் இருங்கள்.
சில எளிய சுவாச பயிற்சியால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை நம் உடல் உணராமல் குறைக்கலாம்.
சீத்தலி என்ற கோடைக்கால சுவாச பயிற்சி ஒன்று உங்களுக்காக விளக்குகிறேன். முயன்று பாருங்கள்.
உணவு சாப்பிடாமல் காலை நேரத்தில் செய்ய வேண்டிய பயிற்சி இது.
உடலை நேராக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
கைகளை தளர்வாக தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நாக்கை குழாய் போல குவித்துக்கொள்ளுங்கள்.
சுவாசத்தை வாய் வழியே நாக்கின் குழாய் வழியே முழுமையாக இழுக்கவும்.
வாய் மூடி சுவாசத்தை மூக்கின் வழியே வெளிவிடவும்.
கண்களை மூடிக்கொண்டுக் கொண்டு இதே போல சுவாசத்தை வாய் வழியே எடுத்து நாசிவழியே வெளிவிடவும்.
தொடர்ந்து 10 நிமிடம் செய்யவும்.
இந்த பத்து நிமிட பயிற்சியால் நாள் முழுவதும் உடல் மிகவும் குளிச்சியாகவும், சூழலில் இருக்கும் வெப்பம் உணரமுடியாத அளவுக்கு குறைவாகவும் தெரியும்.
இவற்றில் குறைந்தது இரண்டு விஷயங்களையோ அல்லது அனைத்தையும் பின்பற்றினால் எளிமையாக கோடைகாலத்தை சமாளிக்கலாம்.
இவ்வாறு விளக்கினான் சுப்பாண்டி.
சுப்பாண்டியின் அறிவுத்திறனுக்கு காரணம் என்ன தெரியுமா?
கோடை உச்சத்திற்கு போனால் சிலருக்கு மனநிலை பிசகிவிடுமாம். அதுபோல சுப்பாண்டி பாதிக்கப்பட்டு மனம்நிலை தவறிவிட்டான்..!
குறிப்பு : ஏப்ரல் மாதம் 20 முதல் மே 5 ஆம் தேதி வரை வெய்யிலின் அளவு அனைத்து இடங்களிலும் அதிகபட்சத்தை எட்டும் அளவுக்கு இருக்கும் என்பதால் தகுந்த முன் ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment